
போலி ஆவணங்களை பயன்படுத்தி தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்து விநியோகித்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகித்த அதிகாரிகளை கைது செய்யுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, பூர்வேசி பாலய மற்றும் ஏனைய சிவில் அமைப்புகளால் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு வெள்ளிக்கிழமை (அக். 13) நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்களை எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு மேலும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், உரிய நடைமுறையை மீறி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு குறித்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதேவேளை இவ் மருந்துகள் பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைகுழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைகுழுவின் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன ஊடக அறிக்கையில், மருந்துகளை இறக்குமதி செய்யும் போது சுங்க அனுமதிக்காக போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டதோடு பின்னர் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகவும் தெரிவித்தார்.
குறித்த, மருத்துகளை Livealth Biopharma Pvt Ltd. எனும் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளதோடு, Isolez Biotech Pharma AG (Pvt) Ltd எனப்படும் இலங்கை மருந்துவ முகவர் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 22 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய திகதிகளில் முறையே கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டதன் பின்னர் ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த உண்மைகள்வெளிச்சத்திற்கு வந்ததாகவும் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைகுழுவுக்கு தெரியவந்துள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் உத்தரவுக்கமைய, Isolez Biotech Pharma நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து மருந்து விநியோக ஆர்டர்களையும் இரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை (12) அறிவிக்கப்பட்டுள்ளது.