
ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் சேவை இன்று சனிக்கிழமை (14) தொடங்கப்பட்டது.
இதன்படி, கப்பல் சேவையானது, இன்று காலை 08:15 மணிக்கு, கேப்டன் பிஜூ ஜார்ஜ் தலைமையில் 50 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்பட்டு . இன்று மதியம்12:30 மணியளவில் காங்கேசன்துறையை அடைந்தது, மீண்டும் மதியம் 02:00 மணிக்கு நாகப்பட்டினம் திரும்பினார்.
அத்தோடு, குறித்த பயணிகள் படகு சேவை மீண்டும் தொடங்கப்பட்டதை அடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி . காணொளியில் பேசுகையில், “இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாங்கள் தொடங்குகிறோம். நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே படகுச் சேவை தொடங்கப்பட்டிருப்பது நமது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என தெரிவித்தார்.
மேலும், கப்பல் சேவை முதலில் அக்டோபர் 10 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில் சில நிர்வாக சிக்கல்களுக்கு உட்பட்டடு பின்னர் அக்டோபர் 14 ஆம் திகதியாக மாற்றியமைக்கப்பட்டது.
இந்தியா-இலங்கை கூட்டுக் குழுவின் கீழ் இத்திட்டம், பிராந்திய வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிப்பது மற்றும் வலுவான மக்கள் உறவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இந்த முயற்சி 1900 களின் முற்பகுதியில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே இருந்த வரலாற்று கடல் உறவுகளை புதுப்பிக்கின்றது.
அத்தோடு, பல தசாப்தங்களுக்கு முன்பு, துறைமுக நகரமான தூத்துக்குடிக்கும் சென்னை வழியாக கொழும்புக்கும் இடையே இயக்கப்பட்ட இந்தோ-சிலோன் எக்ஸ்பிரஸ் 1982 இல் இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பிறகு இயக்கப்படவில்லை.
இரு நாடுகளும் பயணிகள் போக்குவரத்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு படகு சேவைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.