
2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் ஓய்வூதியம் வழங்குவதில் திணைக்களம் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக் கூட்டத்தின் போதே குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், இது தொடர்பாக தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்படாவிட்டாலும், 2028 அல்லது 2030க்குள் ஓய்வூதியம் வழங்குவதில் அரசாங்கம் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, 700,000 ஓய்வூதியம் பெறுபவர்கள் உள்ள நிலையில் தோராயமாக அவர்களின் மாதாந்திர ஓய்வூதிய கொடுப்பனவுகளை முடிக்க 27 பில்லியன் ரூபா தேவை எனவும் இதுதவிர அரசு ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையில் இறந்தவர்களுக்கு மாதாந்தம் 3,000 மில்லியன் ரூபா இழப்பீடு மற்றும் கொடுப்பனவுகளுக்கு தேவை என்றும் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.