
இன்று இடம்பெற்ற அமைச்சரவை மாற்றம் தொடர்பிலும் குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்லவை சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை தொடர்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தியினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டதுடன், அவருக்குப் பதிலாக வைத்தியர் ரமேஷ் பத்திரன புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதேவேளை, அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், அமைச்சுப் பதவிகளை மாற்றியமை ஜனாதிபதியின், குறிப்பாக கெஹலிய ரம்புக்வெல்லவின் ‘தவறான தீர்மானம்’ என தெரிவித்துள்ளார்.
“அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டது எனவும் தற்போதைய சூழ்நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே சிறந்தது என ஜனாதிபதி கருதியிருக்கலாம்” என அவர் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரை சுகாதார அமைச்சராக நியமித்தமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது அதிருப்தியினை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மேலும், “பெரும்பான்மையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் ஆதரவின் மூலமே ஜனாதிபதியால் அரசாங்கத்தை அமைக்க முடிந்துள்ள நிலையில், இவ்வாறான நியமனம் வழங்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களே இதுவரை ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை நீக்கிவிட்டு இரண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியமை ஜனாதிபதியின் தவறான முடிவு எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் ‘தவறான தீர்மானங்கள்’ தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவிப்பதிற்கு அச்சமில்லை என வலியுறுத்திய காரியவசம், அமைச்சரவை மாற்றம் தொடர்பில் அவர் எடுத்த தீர்மானங்கள் தொடர்பில் கட்சி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.