
2024 மார்ச் 31 ஆம் திகதி வரை முன்னோடி திட்டமாக ஏழு நாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு விசா இன்றி நுழைவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா இல்லாமல் நுழைவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தந்து டிவிட்டார் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
அடித்தோடு, இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாக வரும் ஐந்து நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக சுற்றுலா அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தினை பிரதமர் தினேஷ் குணவர்தன, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரால் சமர்பிக்கப்பட்டது.
இதன்படி, எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன்படி சீனா, ரஷ்யா, இந்தியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்திருந்தது.
பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசாவில் இருந்து விலக்கு அளித்ததன் நோக்கம், “இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாகும் எனவும் வரும் ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 5 மில்லியனாக அதிகரிக்கும் எனவும் சுற்றுலா அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், சீன சுற்றுலாப் பயணிகளின் பயணத்திற்காக சீனா அறிவித்துள்ள 20 நாடுகளில் இலங்கையும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, குறித்த உத்தேச வேலைத்திட்டத்தின் மூலம் வீசா பெறுவதற்கு செலவிடப்படும் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துவதுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்கு வருகை தருகின்ற போக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எதிர்வரும் காலங்களில் நாட்டில் உள்ள பெரும்பாலான சுற்றுலாத் தலங்களுக்கு இ-டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.