
வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவு, பரீட்சைகள் திணைக்களத்துடன் இணைந்து, கா.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை அங்கீகாரத்திற்கான ஆன்லைன் சேவையை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, 2001 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட கா.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களுக்கு ஆன்லைன் அங்கீகார சேவைகளை அணுக முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, புதிய ஆன்லைன் முறையின் கீழ், தனிநபர்கள் கா.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களின் அங்கீகாரத்திற்காக தூதரக விவகாரங்கள் பிரிவின் ஆன்லைன் தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும் எனவும் இனி தூதரக விவகாரப் பிரிவுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களைப் பெற வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் https://certificate.doenets.lk/certificate சென்று கா.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை இணைப்பின் மூலம் சமர்ப்பிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சான்றிதழை உருவாக்கிய பிறகு, விண்ணப்பதாரர்கள் SMS மூலம் உறுதிப்படுத்தலைப் பெறுவார்கள் எனவும் இணைப்புடன் ஒவ்வொரு சான்றிதழுக்கும் தனிப்பட்ட குறிப்பு எண் இருக்கும் எனவும் குறித்த SMS உறுதிப்படுத்தல் கிடைத்ததும், விண்ணப்பதாரர்கள், http://consular.mfa.gov.lk:90/ என்ற இணைப்பின் மூலம் ஆவணத்தின் அங்கீகாரத்திற்காக தூதரக விவகாரப் பிரிவைக் கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சான்றிதழ் உருவாக்கம் மற்றும் அங்கீகாரத்துடன் தொடர்புடைய கட்டணங்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இணைப்பைப் பயன்படுத்தி, தேர்வுத் திணைக்களம் மற்றும் தூதரக விவகாரப் பிரிவு ஆகிய இரண்டிற்கும் தனித்தனியாக ஆன்லைனில் செலுத்த வேண்டும் எனவும் மேலதிக விபரங்களை பின்வரும் தொலைபேசி இலக்கம்: 011-2338812 ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.