
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் விதிகளின்படி அமைச்சர்கள் அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு மின்சாரம் வழங்குவது தொடர்பான பொதுக் கொள்கை வழிகாட்டலைத் தயாரிக்கும் அதிகாரம் மின்சார அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. .
அத்தோடு, தற்போதுள்ள பொதுக் கொள்கை வழிகாட்டுதல்களின்படி, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் மின் கட்டண மறுஆய்வு செய்யப்படுவதோடு பொதுமக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்திற்கொண்டு, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் மறுஆய்வு காலத்தை மூன்று (03) மாதங்களுக்கு ஒருமுறை திருத்தம் செய்வது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், இலங்கை மின்சார சபையின் மின் விநியோகத் தணிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கும், வளிமண்டலவியல் திணைக்களத்தின் உதவியுடன் நீர்மின்சார முன்னறிவிப்பை வலுப்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.