
சுற்றுலா விசாவின் மூலம் ஜோர்தானுக்கு சென்றிருந்த 31 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளதாக ஜோர்தானிலுள்ள இலங்கையினுடைய தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த இலங்கையர்கள் கடந்த ஜூலை 22 ஆம் திகதியன்று சுற்றுலா விசாவில் ஜோர்தான் நாட்டுக்குச் சென்றுள்ளனர். பின்னர் அக்டோபர் 12 ஆம் திகதியன்று குறித்த இலங்கையர்களை நாடு கடத்துவதாக ஜோர்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து குறித்த இலங்கையர்களை ஜோர்தான் வடக்கு அம்மன் பொலிஸார் (North Amman court) கைது செய்து தடுப்பு காவலில் வைத்திருந்ததுடன், பின்னர் அக்டோபர் 12 ஆம் திகதியன்று இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் ஜோர்தான் நாட்டுக்குள் புலம்பெயர் தொழிலாளர்களாக சுற்றுலா விசாவில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு கடத்துவதற்கான முயற்சிகளில் ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலப்பகுதிக்குள் இதுவரை 120 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், சட்டப்பூர்வமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புகளினை பெற்று வெளிநாட்டில் குடியேறுமாறும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தங்களை பதிவுசெய்துக் கொள்ளவேண்டும் எனவும் ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம் இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.