
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் திங்கட்கிழமை (13) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 2023 ஒக்டோபர் 19 ஆம் திகதி பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூடிய போது இது தொடர்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏழு நாட்களுக்கு நடைபெறும் எனவும் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும் எனவும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்..
மேலும், நவம்பர் 22 முதல் டிசம்பர் 13 வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து 19 நாட்களுக்கு குழுநிலை விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதோடு 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13, 2023 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.