
1.6 மில்லியன் பொதுத்துறை ஊழியர்களையும் 8 மில்லியன் தனியார் துறை ஊழியர்களையும் மேம்படுத்துவதற்கான உத்தியோகபூர்வ முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 1.6 மில்லியன் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் தனியார் துறையிலும் திருத்தங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இதன் வெற்றியானது எதிர்காலத்தில் மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க வழிவகுக்கும் என நேற்று (07) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, நாட்டின் பொருளாதாரப் பாதையின் ஆழமான பகுப்பாய்வை வழங்கி வரவு செலவுத் திட்டத்தை அதன் நிதிக் கருவியுடன் சீரமைப்பது, திவால்நிலையை எதிர்கொண்ட ஒரு நாட்டின் மீட்சிக்கான பாதையை முதன்மையாகக் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
2019 இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த நிலையில் வரிக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் அரசாங்க வருவாயில் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், முன்னோக்கி நோக்கும் நடவடிக்கையாக, ஜனாதிபதி விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் “தேசிய கவுன்சிலை” நிறுவியுள்ளதாகவும் இது அனைத்து தனிநபர்களுக்கும் தேசிய அக்கறைகளை முன்வைப்பதற்கான ஒரு தளத்தை வழங்குவதாகவும் மற்றும் அரசியலில் மிகவும் உள்ளடக்கிய மற்றும் புதுமையான அணுகுமுறையை ஊக்குவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“நாட்டின் சவால்களை எதிர்கொள்ள புதிய யோசனைகள் மற்றும் அணுகுமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தி, வழக்கமான அரசியல் முறைகளில் இருந்து விலகுவதை இது குறிக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக குழுக்கள் ஏற்கனவே உள்ள திட்டத்திற்கு மேலதிகமாக தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க அழைக்கப்படுகின்றன, ”என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.