
இலங்கையில் புதிய விளையாட்டுச் சட்டத்தை பரிந்துரைப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் ஆய்வுக் குழு தனது அறிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஜகத் பெர்னாண்டோ தலைமையிலான குழு, இலங்கையில் தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பையும், விளையாட்டுத்துறைக்கான நிர்வாகக் கட்டமைப்பையும் முழுமையாக மாற்றுவதற்கு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இலங்கையில் புதிய விளையாட்டுச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான நிபுணர் ஆய்வுக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன் அடிப்படையில் முறையான வரைவைத் தயாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஆணைக்குழுவின் முதன்மைப் பரிந்துரைகளில் ஒன்று, நாட்டின் அனைத்து விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் ஒரு தேசிய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை நிறுவ வேண்டும் எனவும் இது தேசிய விளையாட்டு சங்கங்கள் மீது முழு மேற்பார்வையுடன் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.