
இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால குழு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நவம்பர் 20 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமை புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வழக்கு இன்று (16) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதிகள் டி.என். சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், புதிய நீதியரசர்கள் குழுவொன்றை பெயரிடும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவுக்கு இந்த வழக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரினால் குறித்த வழக்கானது நீதிபதிகள் சோபித ராஜகருணா மற்றும் டி.என்.சமர்கோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அத்தோடு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் நீதிபதி நீல் இத்தவெல உள்ளிட்ட மூன்று நீதிபதிகள், இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து இதுவரை விலகியுள்ளதோடு நவம்பர் 07 ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றம் 14 நாள் தடை உத்தரவை பிறப்பித்ததுடன் ஏழு பேர் கொண்ட இடைக்கால குழுவின் செயற்பாட்டைத் தடுத்து, விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலைத் தடுத்தது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் விக்கும் களுஆராச்சி ஆகியோர் அடங்கிய இருவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
இதன்படி, இலங்கை கிரிக்கெட் சபைக்கான இடைக்காலக் குழுவை நியமித்து விளையாட்டு அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானியைத் தடுப்பது முதலாவதாக அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவைச் செயலாற்றுவதைத் தடுப்பதற்காக நீதிமன்றம் மூன்று தடை உத்தரவுகளைப் பிறப்பித்தது.
அதனையடுத்து, நவம்பர் 13ஆம் திகதி, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட் சபைக்காக தாம் நியமித்த 7 பேர் கொண்ட இடைக்காலக் குழுவின் செயற்பாட்டைத் தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்குமாறு கோரி மனுவொன்றை தாக்கல் செய்தார்.
மேலும், உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் ஏழு பேர் கொண்ட இடைக்காலக் குழு நவம்பர் 06 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.