
6.5 கிலோகிராம் தங்கத்தை ஜெல் வடிவில் கடத்திச் செல்ல முற்பட்ட 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (16) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, இன்று அதிகாலை 01.40 மணியளவில் துபாயில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதோடு குறித்த இலங்கை சுங்க அதிகாரிகள் விமானத்தில் ஏறிய சந்தேக நபரையும் அவரது பயணப் பொதிகளையும் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரின் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கேப்சூல்களுக்குள் ஜெல் வடிவில் இருந்த 6 கிலோ 423 கிராம் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதன் மதிப்பு 110 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, தங்க இருப்பானது அரசாங்க பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரின் கையடக்க தொலைபேசி அழைப்பு பதிவுகள் தொடர்பான அறிக்கையைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளால் மேற்படி அறிக்கைகள் கிடைக்கப்பெறும் வரை சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.