
மோசடி பிரமிட் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ‘OnmaxDT’ நிறுவனத்தின் ஐந்து பணிப்பாளர்களையும் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த வழக்கு இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்தோடு, ஒவ்வொரு சந்தேகநபரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட பிரதான நீதவான் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தார்.
மேலும், மோசடியான பிரமிட் திட்டத்தை மேற்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்திற்குரிய ஐந்து சந்தேக நபர்களும் நவம்பர் 03, 2023 அன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், ஆகஸ்ட் 24 அன்று, இலங்கை மத்திய வங்கி நாட்டில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்திய ‘OnmaxDT’ உட்பட 9 நிறுவனங்களுக்கு தடை விதித்ததுடன் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை விளம்பரப்படுத்துதல், நடத்துதல், நிதியளித்தல், நிர்வகித்தல் அல்லது வழிநடத்துதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.