
கடந்த ஒரு வருடத்தில் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இப் பருவத்தில் விவசாயம் செய்வதற்கு ஹெக்டேருக்கு 40 லீற்றர் டீசல் இலவசமாக வழங்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, விவசாயிகளுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (19) அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த எரிபொருள் மானியம் கடந்த ஆண்டு பருவத்தில் பயிர் சேதம் ஏற்பட்ட வளவ பிரதேசம், ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பயிர் சேதங்களை சந்தித்த அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் எனவும் கடந்த பருவத்தில் பயிரிடப்பட்ட 65,000 ஏக்கர் நெற்செய்கை வறட்சியினால் சேதமடைந்துள்ளதுடன், இப் பருவத்தில் நெல் அறுவடை செய்வதற்கு அந்த விவசாயிகளுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, கடந்த பருவத்தில் நெல் சாகுபடிக்கு இலவச விநியோகத்திற்காக சீனா அரசாங்கம் 6.9 மில்லியன் லீற்றர் டீசலை விவசாய அமைச்சுக்கு வழங்கியுள்ளதுடன் மேலும் டீசல் விநியோகத்தினை சில விவசாயிகள் பெறப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், எஞ்சிய 02 மில்லியன் லீற்றர் டீசலை ஹெக்டருக்கு 40 லீற்றர் வீதம் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.