
உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களில் அமைக்கப்பட்டுள்ள வரம்புகளுக்கு ஏற்ப, உள்ளூர் உணவு நிரப்பித் திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அஃப்லாடாக்சின் அளவைத் திருத்த அமைச்சரவை அமைச்சர்கள் முடிவு செய்துள்ளது.
இதன்படி, திங்கட்கிழமை (20) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன் அமைச்சினால் அமுல்படுத்தப்பட்ட தாய் மற்றும் குழந்தை சுகாதாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட திரிபோஷ திட்டத்தின் பின்னணியில் அஃப்லாடாக்ஸின் அனுமதிக்கப்பட்ட அளவை மீள்திருத்தம் செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் 6 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான குறைந்த ஊட்டச்சத்து அளவைக் கொண்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கூடுதல் ஊட்டச்சத்துக்காகவும் திரிபோஷ வழங்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், 1980 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் தற்போதுள்ள ஒழுங்குமுறைகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஃப்லாடாக்சினுக்கான கடுமையான அனுமதிக்கப்பட்ட வரம்புகள் காரணமாக, திரிபோஷா உற்பத்திக்காக சோளத்தை கொள்வனவு செய்வதில் உள்ள சிரமத்தை சுகாதார அமைச்சு எடுத்துரைத்தது.
எனவே, சர்வதேச அங்கீகாரம் பெற்ற உணவுப் பொருட்களில் (வகை B1க்கான 5ppb மற்றும் மொத்த Aflatoxin இன் நிலை 10 ppb) அஃப்லாடாக்சின் அளவுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரம்புகள் உள்ளூர் உணவு நிரப்பு திட்டங்களுக்கும் செயல்படுத்தப்பட வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டது.