New Updates! Fresh news just arrived.

காரைதீவு பிரதேச சபையின் 17ஆவது மாதாந்தக் கூட்டம்: 2027 மு...

News

காரைதீவு பிரதேச சபையின் 17ஆவது மாதாந்தக் கூட்டம்: 2027 முதல் பல்வேறு சேவைக் கட்டணங்களை அதிகரிக்க முன்மொழிவு!

November 14, 2026 3:25 pm
காரைதீவு பிரதேச சபையின் 17ஆவது மாதாந்தக் கூட்டம்: 2027 முதல் பல்வேறு சேவைக் கட்டணங்களை அதிகரிக்க முன்மொழிவு!
காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் 17ஆவது மாதாந்தக் கூட்டம், தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது யுத்தத்தால் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கடந்த 16ஆவது அமர்வின் கூட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட வேண்டிய விடயங்களும் ஆராயப்பட்டன.

இதன்போது 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வரைவு அனைத்து உறுப்பினர்களுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள சபைக் கூட்டத்தில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்படவுள்ள நிலையில், உறுப்பினர்கள் அதனைப் பரிசீலித்து, திருத்தங்கள் அல்லது முன்மொழிவுகள் இருப்பின் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், 2027 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தும் வகையில், சபையினால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டன. இதன்படி, கலாசார மண்டபத்தின் தற்போதைய வாடகையை அதிகரித்தல், திண்மக்கழிவு சேகரிப்புக் கட்டணத்தை உயர்த்துதல், வணிக உரிமக் கட்டணங்கள் மற்றும் சான்றிதழ் கட்டணங்களைத் திருத்தியமைத்தல் உள்ளிட்ட விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

மேலும், மாட்டிறைச்சி வெட்டுவதற்கான ஒரு நாள் கட்டணத்தை 1,200 ரூபாவிலிருந்து 1,500 ரூபாவாகவும், கோழியிறைச்சிக் கடைகளுக்கான கட்டணத்தை 30,000 ரூபாவிலிருந்து 35,000 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கு முன்மொழியப்பட்டது. இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.என்.எம். ரணீஸ் ஆட்சேபித்ததுடன் தொடர்ந்தும் 1,200 ரூபாவையே தொடர்வதாக தீர்மானிக்கப்பட்டது.

வணிகச் சான்றிதழ் கட்டணத்தை 2,000 ரூபாவிலிருந்து 3,000 ரூபாவாகவும், கட்டிட அனுமதி விண்ணப்பக் கட்டணத்தை 300 ரூபாவிலிருந்து 500 ரூபாவாகவும், சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பக் கட்டணத்தை 200 ரூபாவிலிருந்து 400 ரூபாவாகவும் அதிகரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன், சபைக்குச் சொந்தமான JCB இயந்திரத்தின் ஒரு மணிநேர வாடகைக் கட்டணத்தை 7,000 ரூபாவிலிருந்து 8,000 ரூபாவாக உயர்த்துவதற்கும், சபைக்குச் சொந்தமான உழவு இயந்திரத்தின் ஒரு மணிநேர வாடகைக் கட்டணத்தை 5,100 ரூபாவாக நிர்ணயிப்பதற்கும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

சுற்றுச்சூழல் உரிமங்களைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்படும்போது அபராதம் அறவிடுதல், புதிய சுற்றுச்சூழல் உரிமப் பதிவுகள் மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் புதுப்பித்தலுக்கான கட்டணத்தை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக அதிகரித்தல் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.

இதற்கு மேலதிகமாக, சவ ஊர்தி வாடகைக் கட்டணத்தை 2026ஆம் ஆண்டில் நடைமுறையிலுள்ள அதே கட்டணத்தில் 2027ஆம் ஆண்டிலும் தொடர்ந்தும் அறவிடுதல் மற்றும் வணிக உரிமக் கட்டணங்களைத் தவணை முறையில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

2027ஆம் ஆண்டில் அறவிடப்படவுள்ள வணிக உரிமக் கட்டணம், குப்பை சேகரிப்புக் கட்டணம், கலாசார மண்டப வாடகை, வீதி அகழ்வுக் கட்டணம், வீதி எல்லைச் சான்றிதழ் கட்டணம், விண்ணப்பப் படிவக் கட்டணம், வாகன வாடகைக் கட்டணம், கட்டிட அனுமதிக் கட்டணம் மற்றும் சுற்றுச்சூழல் உரிமக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை அரசிதழில் பிரசுரிப்பதற்கான அனுமதியைப் பெறுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் 2026ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சிகளை முன்னிட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 63,500 ரூபாவுடன் மேலதிகமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான 25,000 ரூபாவையும் சேர்த்து, மொத்தம் 88,500 ரூபாவை சபை நிதியிலிருந்து ஈடுசெய்வதற்கான அனுமதி கூட்டத்தில் பெறப்பட்டது.

மேலும், சபை அலுவலகக் கட்டிடம் அமைந்துள்ள காணியின் மேற்குப் பகுதியில் உள்ள 18 x 20 மீற்றர் அளவிலான காலி நிலத்தை, மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீடு கிடைக்கும் வரை கோரிய நபருக்கு 10,000 ரூபா வாடகைக்கு வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது.

சபையின் வருமானத்தை அதிகரித்தல், சேவைக் கட்டணங்களை மறுசீரமைத்தல், 2027ஆம் ஆண்டுக்கான நிதி முகாமைத்துவம் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை வலுப்படுத்துதல் ஆகிய விடயங்கள் இக்கூட்டத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்தன.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now