New Updates! Fresh news just arrived.

நவம்பரில் 3 சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும்! -...

News

நவம்பரில் 3 சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும்!

November 3, 2026 9:56 pm
நவம்பரில் 3 சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடையும்!
2026 நவம்பர் மாதத்திற்குள் நாட்டுக்கு 3 சமையல் எரிவாயு கப்பல்களைக் கொண்டுவருவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தவிர, ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள தமது எல்.பி.ஜி முனையத்தை உள்நாட்டுச் சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பதற்காகப் பயன்படுத்துவதற்குரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய எரிவாயு விநியோகத் தடைகள் காரணமாக நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ள லாஃப்ஸ் நிறுவனம், விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்குத் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளது.

நவம்பர் மாதத்தில் வர எதிர்பார்க்கப்படும் சமையல் எரிவாயு கப்பல்கள்,

OQT விநியோகஸ்தர் (ஹம்பாந்தோட்டை துறைமுகம்): நவம்பர் 12 - 14


Geogas விநியோகஸ்தர் (கொழும்பு துறைமுகம்): நவம்பர் 15 - 17


OQT விநியோகஸ்தர் (ஹம்பாந்தோட்டை துறைமுகம்): நவம்பர் 24 - 28

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் கடற்போக்குவரத்துத் தடைகள் காரணமாக உலகளாவிய சமையல் எரிவாயு விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் விநியோகப் பாதுகாப்பிற்காக லாஃப்ஸ் நிறுவனம் ஹம்பாந்தோட்டையில் 30,000 மெட்ரிக் தொன் சேமிப்புத் திறன் கொண்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி முனையத்திற்காக 65 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், முதலீட்டுச் சபையின் (BOI) 'Commercial Hub' கட்டமைப்பின் கீழ் உள்ள நிபந்தனைகள் மற்றும் கடந்த காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மறுஏற்றுமதி மட்டங்களைப் பேணுவதில் தடைகள் ஏற்பட்டதால், இந்த முனையத்தை உள்நாட்டுச் சந்தைக்கு சமையல் எரிவாயு விநியோகிக்கப் பயன்படுத்துவது வரையறுக்கப்பட்டிருந்ததாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஹம்பாந்தோட்டை முனையத்தை உள்நாட்டு விநியோகங்களுக்காகப் பயன்படுத்துவதற்கு மூன்று மாத கால தற்காலிக அனுமதியைக் கோரியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தற்போதுள்ள Hub நிலையிலிருந்து விலகி, உரிய வரிகள் மற்றும் தீர்வை வரிகளைச் செலுத்துவதற்கு உட்பட்டு முனையத்தைப் பராமரித்துச் செல்வதற்குத் தேவையான செயல்பாட்டு வழிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய, தேவையான அனுமதிகளை ஒரு வாரத்திற்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு திறைசேரியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலீட்டுச் சபையின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இதுவரை உரிய அனுமதி கிடைக்கவில்லை என அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, 2027 ஜனவரி மாதம் முதல் கொழும்பு துறைமுகத்திற்கு நேரடியாக சமையல் எரிவாயுவை கொண்டுவருவதற்காகப் புதிய டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக அல்லது சர்வதேச மட்டத்திலான விவகாரங்கள் தொடர்பில், லாஃப்ஸ் எரிவாயு பி.எல்.சி மற்றும் லாஃப்ஸ் டெர்மினல்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஐக்கிய அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் வெளிநாட்டுச் சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்தினால் (OFAC) தடைகள் விதிக்கப்பட்டு பெயரிடப்பட்ட நிறுவனங்கள் அல்ல என்றும் அந்நிறுவனம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

உரிய கட்டுப்பாட்டு அனுமதிகள் கிடைத்தவுடன் எரிவாயு விநியோகத்தை முறைப்படி மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக லாஃப்ஸ் நிறுவனம், நுகர்வோருக்கு மேலும் அறிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now