கொடிகாமம் குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு: நீதிமன்ற...
கொடிகாமம் குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு: நீதிமன்றத்தின் உத்தரவு!
மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கொடிகாமம் குளத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கில் இன்றையதினம் ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொடிகாமம் குளத்தில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இஹன்படி, கடமையிலிருக்க வேண்டிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறித்த மரணம் சம்பவம் இடம்பெற்ற நேரம் கடமையில் இருக்காமல் சட்டத்திற்கு முரணாக அந்த இடத்தில் நின்றிருந்தார்.
எனவே குறித்த மரணத்தில் குடும்பத்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த விடயத்தினை நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
இதன்படி, வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
பொலிசாரின் அராஜகமும் துஷ்பிரயோகமும் இந்த விடயத்தில் உள்ளதாக நாங்கள் சந்தேகிக்கின்றோம். நீதிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.
பு.கஜிந்தன்