New Updates! Fresh news just arrived.

மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை! - G...

News

மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை!

November 26, 2025 10:04 am
மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை!

கல் ஓயா ஆற்றுப் படுக்கைக்கு தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.





இந்நிலைமை காரணமாக விசேடமாக தமன, அம்பாறை, இறக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





இன்று (26) நண்பகல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, நேற்று (25) அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 225 மி.மீ. அம்பாறையில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.





தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்படாவிட்டாலும், ஏனைய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் சூரியபண்டார தெரிவித்தார்.





அதிக மழைவீழ்ச்சி காரணமாக தற்போது நாட்டின் 25 பிரதான குளங்களும் 26 நடுத்தர குளங்களும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய மூன்று ஆற்றுப் படுக்கைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.





மேலும், சோமாவதிய மற்றும் மனம்பிட்டி ஆகிய பிரதேசங்களில் இன்று மாலைக்குள் நீரில் மூழ்கின்ற வாய்ப்பு உள்ளதாகவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.





யான் ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களும் அப்பகுதி ஊடாகப் பயணிக்கும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், விசேடமாக குச்சவெளி, பதவிய ஸ்ரீபுர, கெப்பித்திகொல்லாவ, கோமரன்கடவல, ஹொரவபொத்தானை, மொரவெவ, கஹட்டகஸ்திகிலிய மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.





இதேவேளை, முந்தானை ஆற்றுப் படுக்கையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, முந்தானை ஆறு படுக்கையைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட முந்தானை ஆறு சார்ந்த தாழ்வான பகுதிகளில், தற்போதிருந்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.





மாதுறு ஓயா படுக்கையைச் சேர்ந்த கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, மஹாஓயா, பதியத்தலாவ, தெஹியத்தகண்டி, திம்புலாகல, வெலிகந்த மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மாதுறு ஓயா சார்ந்த தாழ்வான பகுதிகளில் தற்போதிருந்து அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.






https://youtu.be/sNuROsmXKME?si=IH7WXDUjYH3AUrtS

Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now