ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி! - Gur...
ஊர்காவற்துறை பிரதேச சபையின் பாதீடு மீண்டும் தோல்வி!
ஊர்காவற்றுறை பிரதேச சபையினுடைய 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடானது இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இருந்தும் உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் இருக்கும் விசேட சரத்துக்கமைய தவிசாளருக்கு இருக்கும் தன்னிச்சையான அதிகாரம் ஊடாக பாதீடு நடைமுறையாககின்றது.
ஊர்காவற்துறை பிரதேசபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் குறித்த பாதீட்டை மீண்டும் சபையில் நிறைவேற்றுவதறகான விசேட அமர்வு இன்று (8)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தவிசளர் அன்னராச தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சபையினுடைய வருமானம் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள், உதவி கோரியுள்ள முன்மொழிவுகள் மாற்றும் சிறப்பு வருவாய் முயற்சிகள் உள்ளிட்ட பல திருத்தங்களோடு 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு
இரண்டாவது முறையாகவும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் நலனோ தற்போதைய தேவை கருதிய நடைமுறைக்கு ஏற்றதோ இல்லாது குறித்த பாதீடு மீண்டும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், நடைமுறைக்கு சாத்தியமான விடையங்களை உதாசீனம் செய்துள்ளதாகவும் கூறி உறுப்பினர்கள்
பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர்.
வாத பிரதிவாதங்களுக்கு பின்னர் பாதீட்டை நிறைவேற்றும் பொருட்டு தவிசாளரால் சபையில் வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாகவும் விடப்பட்டது.
பாதீட்டினை நிறைவேற்றுவதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது எதிராக 8 வாக்குகளும் ஆதரவாக 5 வாக்குகளும் கிடைக்கப்பெற்ற நிலையில் குறித்த பாதீடானது மேலதிக 3 வாக்குகளினால் தோற்கடிக்கப்படுள்ளது.
இதன்படி, கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த பிரதேச சபையினுடைய 13 பேர் கொண்ட மொத்த உறுப்பினர்களில் 4 ஆசனங்களினை ஈ.பி.டி.பியும் தமிழரசுக் கட்சி 2 ஆசனங்களினையும்
தேசிய மக்கள் கட்சி 3 ஆசனங்களினையும், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும்மற்றும் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட கட்சி 1 ஆசனத்தினையும் பெற்றிருந்தன.
குறித்த பிரதேச சபையினுடைய ஆசனங்களில் முன்னிலை பெற்ற ஈ.பி.டி.பி ஆட்சி அமைக்க முன்வராத நிலையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஏது நிலையை ஈ.பி.டி.பி வழங்கியிருந்தது.
இதன் அடிப்படையில் 2 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சியானது, 4 ஈ.பி.டி.பி உறுப்பினர்களது ஆதரவுடன் ஆட்சியமைக்க தனது முன்மொழிவை சபையில் பிரஸ்தாபித்திருந்தது.
ஆனால் 3 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தேசிய மக்கள் சக்தியுடனான நடு நிலமை இணக்கப்பாடுடன் சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட கட்சியின் ஓர் ஆசனம், தமிழரசுக் கட்சியின் ஓர் ஆசனத்தை கொண்டு சபையின் ஆட்சி அதிகாரத்தை வசப்படுத்தியிருந்தது.
இன்றைய வாக்கெடுப்பில் எதிராக ஈ.பி.டி.பியின் 04 வாக்குகளும், என்.பி.பியின் 03 வாக்குகளும், தமிழரசு கட்சியின் ஒரு வாக்கும் பதியப்பட்டன.
உள்ளூராட்சி அதிகார சபை சட்டத்தின் பிரகாரம் இரண்டாவது தடவையும் பாதீடு தோற்கடிக்கப்பட்டால் அது தவிசாளரது தன்னிச்சையான சிறப்பு அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு செயலாக்கம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
பு.கஜிந்தன்