விவசாய ஓய்வூதியம் பெறுவதற்கான கால அவகாசம் நீடிப்பு! - Gur...
விவசாய ஓய்வூதியம் பெறுவதற்கான கால அவகாசம் நீடிப்பு!
'டித்வா' புயல் நிலைமையின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், ஓய்வூதியம் வழங்குவதற்கான கால அவகாசத்தினை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய ஓய்வூதியதாரர்கள் டிசம்பர் மாதம் முழுவதும் அரச வேலை நாட்களில் தமக்குரிய தபால் நிலையங்கள் அல்லது உப தபால் நிலையங்கள் ஊடாகத் தமது ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக விவசாய ஓய்வூதியம் ஒவ்வொரு மாதமும் 9 ஆம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை வழங்கப்படும்.
இருந்தபோதும், அனர்த்த நிலைமையின் காரணமாகத் தபால் நிலையங்களுக்குச் செல்லும் வீதிகள் சேதமடைந்திருப்பதால் ஏற்படும் போக்குவரத்துச் சிரமங்களினை கருத்திற் கொண்டு, இம்முறை குறித்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது 178,753 விவசாயிகள் விவசாய ஓய்வூதிய நன்மைகளினை பெறுவதுடன், 6,312 மீனவர்கள் மீனவர் ஓய்வூதியத்தினை பெறுகின்றனர்.
மேலும், டிசம்பர் மாத ஓய்வூதியக் கொடுப்பனவிற்காக 413 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும் விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.