New Updates! Fresh news just arrived.

5 மாதங்களுக்கு முன் காணாமல் போன 15 வயதுச் சிறுமி இரண்டு ம...

News

5 மாதங்களுக்கு முன் காணாமல் போன 15 வயதுச் சிறுமி இரண்டு மாதக் குழந்தையுடன் மீட்பு!

November 14, 2026 8:02 pm
5 மாதங்களுக்கு முன் காணாமல் போன 15 வயதுச் சிறுமி இரண்டு மாதக் குழந்தையுடன் மீட்பு!
ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயதுடைய பாடசாலைச் சிறுமி ஒருவர், அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் பொலித்தீன் விரிப்புகளால் மறைக்கப்பட்ட கற்குகை ஒன்றுக்குள் குழந்தையொன்றைப் பிரசவித்து, இரண்டு மாதப் பச்சிளம் குழந்தையுடன் வாழ்ந்து வந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகாமையில் அமைந்துள்ள உடுதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமுரே கனதகெட்டிய - தம்படே பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியே சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் திடீரெனக் காணாமல் போயிருந்தார். இது குறித்துச் சிறுமியின் குடும்பத்தினர் உடுதும்பர பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய, உடுதும்பர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷித தொம்பகம்மன தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கித்துள் கைத்தொழில் பிரதானமாக இடம்பெறும் அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து, தனிநபர் ஒருவருக்குத் தேவையான அளவை விட அதிகளவான அரிசியை நாளாந்தம் கொள்வனவு செய்து செல்லும் 23 வயதுடைய இளைஞன் மீது பொலிஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த இளைஞனை இரகசியமாகப் பின்தொடர்ந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள், மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றடைந்தனர். அங்கு பொலித்தீன் விரிப்புகளால் மறைக்கப்பட்டிருந்த கற்குகை ஒன்றுக்குள் இரண்டு மாதப் பெண் குழந்தையுடன் தங்கியிருந்த 15 வயதுச் சிறுமியைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட சிறுமி மற்றும் குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் 23 வயது இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் நெஞ்சை உலுக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வித மருத்துவ வசதிகளுமின்றி குறித்த கற்குகைக்குள்ளேயே சிறுமி குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிரசவத்தின் பின்னர் கித்துள் கைத்தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோலினால் குழந்தையின் தொப்புள் கொடி வெட்டப்பட்டுள்ளது. மேலும், தாய்க்கும் சேய்க்கும் காட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட கைமருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுடன், கித்துள் பாணி காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் சட்டியிலேயே குழந்தையைக் குளிப்பாட்டியுள்ளதாகவும் அந்த இளைஞன் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் 23 வயதுடைய இளைஞனும், அவனுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாகக் கூறப்படும் 36 வயதுடைய அவனது மாமனும் உடுதும்பர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 363ஆவது பிரிவின் கீழ், 16 வயதுக்குக் குறைந்த சிறுமியொருவரின் சம்மதத்துடனோ அல்லது சம்மதமின்றியோ மேற்கொள்ளப்படும் பாலியல் உறவு சட்டபூர்வமான பாலியல் வல்லுறவாகக் கருதப்படுவதால் இது பாரதூரமான குற்றமாகும். அத்துடன், மருத்துவக் கண்காணிப்பின்றி குகைக்குள் பிரசவம் பார்த்தமையும், சுகாதாரமற்ற கூரிய ஆயுதத்தால் தொப்புள் கொடியை வெட்டியமையும் தாய்க்கும் சேய்க்கும் உயிராபத்தான தொற்றுக்கள் ஏற்படக்கூடிய பாரிய அபாய நிலையை உருவாக்கியிருந்தது.

பொலிஸாரால் மீட்கப்பட்ட இளம் தாயும் இரண்டு மாதக் குழந்தையும் உடுதும்பர பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களால் குழந்தை குளிப்பாட்டிச் சுத்தம் செய்யப்பட்டு, மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now