New Updates! Fresh news just arrived.

மருதமுனையில் தேசிய மட்ட சாதனையாளர்களை பாராட்டி வீதி ஊர்வல...

News

மருதமுனையில் தேசிய மட்ட சாதனையாளர்களை பாராட்டி வீதி ஊர்வலமும் கௌரவிப்பும்!

February 8, 2026 11:51 am
மருதமுனையில் தேசிய மட்ட சாதனையாளர்களை பாராட்டி வீதி ஊர்வலமும் கௌரவிப்பும்!
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி கடந்த வாரம் அனுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட போட்டியில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய கால்பந்தாட்ட அணி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தை பெற்று தேசிய சாதனையை பெற்றுள்ளனர்.

இந்த வரலாற்று சாதனையை பெற்றுக் கொடுத்த பாடசாலையின் கால்பந்தாட்ட அணி வீரர்களை கௌரவிக்கும் வீதி ஊர்வலம் பாடசாலையின் பொறுப்பதிபர் முஹம்மட் அன்சார் தலைமையில் (05) மருதமுனையில் நடைபெற்றது.

20 வருடங்களின் பின்னர் தேசிய மட்டத்தில் சாதனையை ஈட்டிய குறித்த மாணவர்கள், இவர்களினை வழிநடாத்திய உடற்கல்வி ஆசிரியர்களான எம்.ஆர்.ஏ.கியாஸ், ஏ.சி.எம்.இப்ஹாம் மற்றும் பயிற்சியாளர் எம்.என்.எம்.ஜப்றான் ஆகியோருக்கும் இதன்போது வாழ்த்தி வரவேற்கப்பட்டதோடு, இவர்களுக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலையின் பிரதான அரங்கில் நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர்களான எம்.எஸ்.எம்.ஜாபிர், எம்.எச். றியாஸா உள்ளிட்டவர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு பதக்கங்களை அணிவித்து சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர். சாதனை மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களோடு அரங்குக்கு அழைக்கப்பட்டு பெற்றோர்கள் முன்னிலையில் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிகழ்வில் பாடசாலை கல்வி சமூகத்தினர், விளையாட்டு துறையோடு பிரபலமான நலன் விரும்பிகள், பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now