New Updates! Fresh news just arrived.

AI ஆனது மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின்...

News

AI ஆனது மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரிக்க வேண்டும் - ஆளுநர்!

August 21, 2026 7:03 pm
AI ஆனது மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரிக்க வேண்டும் - ஆளுநர்!
செயற்கை நுண்ணறிவானது (Artificial Intelligence) மனித அதிகாரிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவர்களின் வினைத்திறனை அதிகரித்து மக்களுக்கான சேவைகளைத் துரிதப்படுத்துவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், தொழில்நுட்பம் எத்துணை வளர்ச்சியடைந்தாலும் நிர்வாகத்தின் மையமாக மனிதநேயமே தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பான விசேட கலந்தாய்வுச் செயலமர்வு இன்று (21) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்,

"உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், அரச நிர்வாகமும் அதற்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். மக்கள் தகவல்களையும் சேவைகளையும் உடனடியாகப் பெறவே விரும்புகின்றனர். இதற்காகப் பல அலுவலகங்களுக்குச் செல்வதையோ அல்லது தேவையற்ற காலதாமதங்களையோ அவர்கள் விரும்புவதில்லை. ஒரு அதிகாரி பெருமளவான ஆவணங்களை ஆராய்ந்து, தரவுகளை ஒப்பிட்டு முடிவெடுக்கும் நேரத்தைச் செயற்கை நுண்ணறிவு கணிசமாகக் குறைக்கிறது. மாகாண நிர்வாகத்தில் காணப்படும் ஆளணி மற்றும் வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியில், குறைந்த வளங்களைக் கொண்டு அதிக சேவைகளை வழங்குவதற்கான வாய்ப்பையும் இது எமக்குத் தருகிறது.

இன்று முன்வைக்கப்பட்டுள்ள 'ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டுக் கோபுர பூர்வீக செயற்கை நுண்ணறிவு வடக்கு மாகாண நிர்வாகச் சூழலியல் தளம்' (Unified Control Tower Native-AI Northern Province Governance Ecosystem Platform) என்ற முன்மொழிவானது, மாகாண நிர்வாகத்தின் பல்வேறு துறைகளை ஒன்றிணைத்து டிஜிட்டல் (Digital) மாற்றத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு விரிவான அணுகுமுறையாகும். எனினும், ஏ.ஐ. (AI) தொழில்நுட்பத்தின் வெற்றியானது அதன் தொழில்நுட்பத் திறனால் மாத்திரம் அளக்கப்படக் கூடாது. அது பொதுமக்களின் சிரமங்களை எவ்வளவுக்குக் குறைத்து, அவர்களின் அனுபவத்தை மேம்படுத்துகிறது என்பதிலேயே தங்கியுள்ளது.

அரச நிறுவனங்களிடம் பொதுமக்களின் அடையாள, சுகாதார, நிதி மற்றும் காணி தொடர்பான மிக முக்கியமான தனிப்பட்ட தரவுகள் காணப்படுகின்றன. எனவே, நிர்வாகத்தில் இவ்வாறான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும்போது தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை, அணுகல் கட்டுப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் ஆரம்பம் முதலே அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும். தொழில்நுட்பம் பரிந்துரைகளை வழங்கினாலும், இறுதி நிர்வாகத் தீர்மானம் ஒரு அரச அதிகாரியிடமே இருக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அத்தோடு, எமது மாகாணத்தின் தனித்துவமான சமூக, மொழி, பண்பாட்டு மற்றும் புவியியல் சூழலுக்கு ஏற்றவாறே இவ்வாறான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.

இந்தச் செயலமர்வில், இந்தியாவின் 'வாசா' தகவல் தொழில்நுட்ப சேவைகள் (VASA InfoTech Services Pvt, Ltd) நிறுவனத்தின் ஸ்தாபகரும், முதன்மைச் செயற்கை நுண்ணறிவு வியூகவியலாளருமான செந்தில்குமரன் மற்றும் தனசேகர் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட மாகாண அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now