New Updates! Fresh news just arrived.

எயார்பஸ் வழக்கு: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பிறப்...

News

எயார்பஸ் வழக்கு: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!

July 14, 2026 1:04 pm
எயார்பஸ் வழக்கு: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு!
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) விமானங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்ச பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன், இந்த விசாரணைகளின் மேலதிக முன்னேற்றங்களை அறிக்கை செய்வதற்காக மற்றுமொரு திகதியை வழங்குமாறு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரினர்.

இதன்போது, வர்த்தகரான நிமால் பெரேரா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி உதார முஹந்திரம்கே, நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பிக்க அனுமதி கோரினார்.

இருப்பினும், குறித்த நபர் இதுவரையில் இந்த வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்படாததால், அவர் சார்பில் விடயங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என பிரதம நீதவான் தெரிவித்தார்.

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வழக்கின் இரண்டாவது சந்தேகபரான அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகபரான ஷமிந்திர ராஜபக்ஷ ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் இதற்கு முன்னர் பிடியாணை பிறப்பித்திருந்தது.

முன்வைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்ட பிரதான நீதவான், இந்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now