New Updates! Fresh news just arrived.

நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படும் அபாயம் குறித்து எச்சர...

News

நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை

March 5, 2026 12:38 pm
நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை
நாட்டில் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதன் காரணமாக எதிர்வரும் மாதங்களில் மின்சார விநியோகத்தில் தடைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சாரசபை சமர்ப்பித்துள்ள 2026 பெப்ரவரி மாத உச்ச மின்சார தேவைக் கணிப்பை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தொடர்ச்சியான மின்சார விநியோகத்தைப் பேணுவதில் சவால்கள் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் படி, இரவு நேர உச்ச தேவையை நிறைவேற்ற நீர்மின் நிலையங்கள் அதிகபட்சமாக 1300 மெகாவாட் வரை மட்டுமே வழங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்விஜய மின்நிலையத்தின் ஒவ்வொரு அலகிலும் சுமார் 40 மெகாவாட் உற்பத்தி குறைவு ஏற்படும் வாய்ப்புள்ளதால் அதன் மொத்த பங்களிப்பு 690 மெகாவாட் வரை மட்டுமே இருக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மின்சாரசபை வழங்கிய பராமரிப்பு அட்டவணையின் படி,

• லக் விஜய மின்நிலையம் – 1ஆம் அலகு ஜூன் மாதத்தில் 25 நாட்கள் பராமரிப்பிற்காக நிறுத்தப்படும்.

• 2ஆம் அலகு ஜூலை மாதத்தில் 25 நாட்கள் பராமரிப்பிற்காக நிறுத்தப்படும்.

• மேற்குக்கரை மின்நிலையம் (270 மெகாவாட்) ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் பராமரிப்பிற்காக நிறுத்தப்படும்.

• களனிதிஸ்ஸ மின் நிலையம் (150 மெகாவாட்) மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பராமரிப்பிற்காக நிறுத்தப்படும்.

இந்த சூழ்நிலையில், ஏப்ரல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார தேவைகள் முறையே 3030, 3070 மற்றும் 3000 மெகாவாட் அளவை எட்டினால் மின்சார உற்பத்தி திறனில் குறைபாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், கிடைக்கும் நிலக்கரி மின்நிலையங்களில் ஏதேனும் ஒரு அலகு அல்லது பெரிய மின்நிலையம் செயலிழந்தால், குறிப்பாக இரவு நேர உச்ச தேவையை நிறைவேற்றுவதில் கடுமையான சிக்கல் உருவாகும் அபாயம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தரம் குறைந்த நிலக்கரியில் அதிக சாம்பல் (Ash) உள்ளடக்கம் இருப்பதும், நீராவி வெப்பநிலை வரம்பு மீறப்படுவதும் கொதிகலன் அமைப்புகளில் உபகரணங்கள் அதிகமாக kulithal (erosion) அடையவும், அதிக வெப்பம் ஏற்படவும் வழிவகுக்கலாம் என அறிக்கை எச்சரிக்கிறது.

இதன் காரணமாக நாட்டில் மின்சார உற்பத்தி நிலைத்தன்மை பாதிக்கப்படுவதுடன், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மின் தடை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now