New Updates! Fresh news just arrived.

வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாக்க அனைத்து உள்ளூராட்சி மன...

News

வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாக்க அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் தயாராக இருக்க வேண்டும்: ஆளுநர் தெரிவிப்பு!

August 11, 2026 2:38 pm
வெள்ள அபாயத்தில் இருந்து பாதுகாக்க அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் தயாராக இருக்க வேண்டும்: ஆளுநர் தெரிவிப்பு!
குறுகிய காலத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என காலநிலை முன்னறிவிப்புகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதனை எதிர்கொள்ள வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் மனிதவளம், நிதி, வாகனங்கள் மற்றும் அவசரகால உபகரணங்களுடன் முழுமையான தயார்நிலையில் இருக்க வேண்டியது அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சுகளின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (11) ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன், தெருநாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சை வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. லஞ்சீற் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அதனை மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய, 2027ஆம் ஆண்டு தொடக்கம் மேலும் கடுமையான அமுலாக்க நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

அத்துடன், வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேசங்களில் நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான குளங்களை உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகத் தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூராட்சி ஆணையாளர் ஆளுநருக்கு அறிவித்தார்.

கட்டட அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரைபடங்களுக்கும் நடைமுறையில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக குடிபுகு சான்றிதழ்களை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டட அனுமதிக்கு முரணாக அமைக்கப்பட்ட கட்டுமானங்களுக்கு எதிராக உள்ளூராட்சி மன்றங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து வடகிழக்கு பருவமழை தாக்கம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதால், இடர்நிலை முகாமைத்துவத்துக்குத் தேவையான அனைத்து முன்னாயத்தங்களையும் மேற்கொள்ளுமாறு ஏற்கனவே உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்தார். அவசரநிலைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள், வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

'பிராஜா சக்தி' வேலைத்திட்டத்தின் கீழ் மாகாண சபைக்குச் சொந்தமான வீதிகள் மற்றும் கட்டடங்களைப் புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதே பணிகள் ஏனைய நிதி மூலங்களின் கீழ் மீள இடம்பெறாதவாறு திட்டங்களை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டது. இரண்டாம் கட்ட வீடமைப்புத் திட்டம், டிட்வா மீள்கட்டுமானத் திட்டம், நிரல் அமைச்சு மற்றும் மாவட்டச் செயலகங்கள் ஊடான நிதி ஒதுக்கீடுகளின் கீழ் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் திருப்திகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேவேளை, உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது தொழில்நுட்பக் கொள்ளளவை மீறிய அளவில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் உதவி உள்ளூராட்சி ஆணையாளர்கள் சுட்டிக்காட்டினர்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு சேவைகளைப் பெற வருகை தரும் பொதுமக்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துமாறு அலுவலர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் ஆளுநர் வலியுறுத்தினார். இது தொடர்பாக தனக்குப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில், வீதிப் பணிகளுக்குத் தேவையான தாரைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சிக்கல்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட சிலர் கடமைகளைப் பொறுப்பேற்காத நிலை குறித்தும் ஆராயப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து கிராமிய அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, வடக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றின் செயற்பாட்டு முன்னேற்றங்களும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.

தற்போதைய காலப்பகுதி வடக்கு மாகாணத்துக்கு அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகள் வருகை தரும் பருவமாக இருப்பதால், தமது எல்லைக்குட்பட்ட சுற்றுலாத் தலங்களின் தூய்மையை உறுதிப்படுத்துவதில் உள்ளூராட்சி மன்றங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் பொது இடங்களில் குப்பைகளை கொட்டும் சம்பவங்கள் தொடர்பான சி.சி.ரி.வி. காணொலிப் பதிவுகளை உரிய பொலிஸ் நிலையங்களுக்கு விரைவாக அனுப்பி சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் அவர் பணிப்புரை வழங்கினார்.

இதனுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் தூய்மை இலங்கை செயலணி வழங்கியுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திற்கான ஒருங்கிணைந்த கழிவு முகாமைத்துவ செயற்றிட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, நிர்வாகம், திட்டமிடல் மற்றும் பொறியியல்), உள்ளூராட்சி ஆணையாளர், திட்டமிடல்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now