New Updates! Fresh news just arrived.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான சட்டத்தில் கொண்டுவர...

News

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தம்!

August 10, 2026 7:06 pm
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கான சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தம்!
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபைக் கூட்டமானது இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்படும் எல்லையற்ற செல்வத்துடன் தொடர்புடைய குற்றவியல் சூழலானது தற்போது பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத்துறைக்கும், சமூக ஒழுக்க நெறிக் கட்டமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றங்கள் தொடர்பில் அஞ்சும் சமூகத்தை உருவாக்குவதற்காக, கடுமையான விதிகளைச் செயற்படுத்த வேண்டிய அவசியமும் தேசிய செயற்பாட்டு சபையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வழக்குகள் தாமதமடைவதற்குக் காரணமான அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடும் செயல்முறை குறிப்பிடத்தக்க அளவில் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்கும் முறைமை தொடர்பான சட்டத் திருத்தங்கள், 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வுச் சட்டத்தின் திருத்த வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், சட்டவரைவுத் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ளல் மற்றும் பாடசாலை கட்டமைப்புக்குள் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் இணைந்து நடைமுறைப்படுத்தும் 'மிதுரு பாடசாலை' வேலைத்திட்டம் என்பவற்றின் முன்னேற்றம் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், ஆரம்ப கட்டத்திலேயே இனங்காணுதல், புனர்வாழ்வளித்தல், சட்டத் திருத்தம் மற்றும் நிறுவன மாற்றங்களை மேற்கொள்ளுதல், மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுத்தல், தொடர் கண்காணிப்பு, திட்டமிடல் ஒழுங்குபடுத்தல், மீளாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடல் ஆகிய திருத்தப்பட்ட 06 வழிமுறைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பல்தரப்பு தேசிய மூலோபாயத் திட்டத்தின்படி, நிறுவன மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் சவாலை தேசிய பேரழிவாகக் கருதி அதனை முற்றாக ஒழிப்பதற்காக நாட்டில் நடைமுறைச் செயற்பாடு மற்றும் வேகமான கருத்தியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவசியமும், அதன்போது மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் உள்ள பொறுப்பும் வகிபாகமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now