New Updates! Fresh news just arrived.

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மனி...

News

அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல்!

November 2, 2026 2:57 pm
அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு: மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் அச்சுறுத்தல்!
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக முதலைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பீதியும் நிலவி வருகின்றது.

குறிப்பாக பெரியநீலாவணை முதல் பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளிலும், இப்பிரதேசங்களில் அமைந்துள்ள பிரதான கால்வாய்கள், ஆற்றுப்படுக்கைகள், நீரோடைகள் மற்றும் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளிலும் அதிகளவிலான முதலைகள் தென்படுவதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது நிலவும் காலநிலை மாற்றம், தொடர்ச்சியான மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக முதலைகள் தமது வழக்கமான இயற்கை வாழ்விடங்களிலிருந்து வெளியேறி, நீரோட்டத்துடன் அடித்து வரப்பட்டுப் புதிய நீர்நிலைகளிலும் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளிலும் தஞ்சமடைந்து வருகின்றன.

சம்மாந்துறை, கல்முனை , நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்ற ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் இவ்வாறான முதலைகளின் நடமாட்டம் அதிகமாகப் பதிவாகியுள்ளது.அண்மைக்காலமாகச் சில குடியிருப்புப் பகுதிகளுக்குள் சுமார் 5 அடி முதல் 9 அடி வரை நீளமுடைய பாரிய முதலைகள் புகுந்து, வளர்ப்பு நாய்கள், கோழிகள் உள்ளிட்டவற்றை வேட்டையாடிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சில இடங்களில் முதலைகள் நடமாடும் பகுதிகளைப் பார்வையிடப் பொதுமக்கள் செல்வதுடன் குறிப்பிட்ட சில இடங்களில் எச்சரிக்கைப் பலகைகளும் நடப்பட்டுள்ளன.

இப் முதலைகளின் நடமாட்டம் மனிதர்களுக்கு மாத்திரமன்றி, மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளுக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. வயல் நிலங்களிலும் திறந்த வெளிகளிலும் மேயும் பசுக்கள், எருமைகள் நீரருந்துவதற்காகக் கால்வாய்கள் மற்றும் குளங்களுக்குச் செல்லும்போது முதலைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

நிலவும் ஆபத்தான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் மழை மற்றும் வெள்ளப் பெருக்குக் காலங்களில் கால்வாய்கள், குளங்கள், ஆறுகள் மற்றும் நீரோடைகளில் இறங்குவதைத் தவிர்க்க வேண்டும்.சிறுவர்கள், பெண்கள் மற்றும் கால்நடைகளை நீர்நிலைகளுக்கு அருகில் தனியாகச் செல்ல அனுமதிக்கக் கூடாது என பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்:

அதேவேளை, குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகும் முதலைகளைப் பிடித்துப் பாதுகாப்பான வனப்பகுதிகளில் விடுவிக்கவும், முதலைகளின் அச்சுறுத்தலில் இருந்து மனித உயிர்களையும் கால்நடைகளையும் பாதுகாக்கவும் வனஜீவராசிகள் திணைக்களம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிராந்திய நிர்வாக அதிகாரிகள் இணைந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அவசர கோரிக்கை விடுக்கின்றனர்.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now