New Updates! Fresh news just arrived.

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம்: வாக்...

News

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம்: வாக்குமூலம் பெற்று பிராதைத் தாக்கல் செய்யுமாறு கட்டளை

January 22, 2026 1:43 pm
அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம்: வாக்குமூலம் பெற்று பிராதைத் தாக்கல் செய்யுமாறு கட்டளை
பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்து அவரது கடமையினை புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட மேல் நீதிமன்றத்தின் நீதிபதியின் வாக்குமூலத்தினை பெற்று இறுதி அறிக்கை அல்லது பிராதை தாக்கல் செய்ய எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி வரைக்கும் மறுதவணையிட்டு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது .

குறித்த வழக்கானது நேற்று புதன்கிழமை(21) கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் திறந்த மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பெரிய நீலாவணை பொலிஸார் சமர்ப்பணங்களினை மேற்கொண்டு இவ் வழக்கில் சந்தேக நபரது வாக்கு மூலத்தினை இன்னும் பெறவில்லை எனவும் பொலிஸ் சட்டப் பிரிவிற்கு அனுப்பிய கோவைக்கான ஆலோசனை கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாகவும் அது கிடைக்கப் பெற்றவுடன் மன்றுக்கு அறிக்கையிட வேறு தினம் ஒன்றை வழங்குமாறும் கோரி இருந்தனர்.

மேற்படி சமர்பணத்திற்கு தனது ஆட்சேபனையினை பதிவு செய்த பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் சார்பிலான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் சமர்ப்பணங்களினை மேற்கொண்டு குறித்த இவ்வழக்கிலே சந்தேக நபரினுடைய வாக்கு மூலத்தினை பெற்று இறுதி அறிக்கை அல்லது பிராது சமர்ப்பிக்குமாறு கடந்த தவணையில் இக் கெளரவ மன்றினால் தெளிவான கட்டளை ஆக்கப்பட்டிருத்தும் வழக்குத் தொடுனரான பெரியநீலாவணைப் பொலிஸார் தொடர்ந்தும் இவ்வழக்கினை தாமதப்படுத்தும் நோக்கோடு மீண்டும் மீண்டும் தினம் கோரிவருவதாகவும் குறித்த இவ்வழக்கில் நீதியைக் கண்டடையும் பொருட்டு சந்தேக நபரினுடைய வாக்குமூலத்தினைப் பெற்று இறுதி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கட்டளையை ஆக்குமாறும் மன்றைக் கோரி இருந்தார்.

இதன்படி, இருபக்க சமர்ப்பணங்களினையும் கேட்டறிந்த மன்றானது சந்தேக நபரது வாக்குமூலத்தினை பெற்று வழக்கின் இறுதி அறிக்கையினை மன்றில் தாக்கல் செய்யுமாறு கட்டளையாக்கியது.

குறித்த வழக்கானது மீண்டும் எதிர்வருகின்ற பெப்ரவரி மாதம் 11 ஆந் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரத்தியட்சக முறைப்பாட்டாளரின் சார்பில் மன்றில் தோன்றி இருந்த சட்டத்தரணி எமது செய்தியாளரான பாறுக் ஷிஹானிடம் குறிப்பிட்டார்

செய்தியின் பின்னணி,

2022 ஆம் ஆண்டு மஹாதேவன் முரளிதரன் என்னும் முறைப்பாட்டாளரால் பெரியநீலாவணைப் பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக பெரியநீலாவனைப் பொலிஸாரால் 28.11.2022 ஆம் திகதி பீ (B) அறிக்கை ஒன்று கல்முனை நீதிவான் நீதிமன்றிலே தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த பீ அறிக்கையின் பிரகாரம் முறைப்பாட்டாளரினுடைய உறுதியொன்றினை எழுதி நிறைவேற்றிய பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுத்து அவரது நொத்தாரிசுக் கடமையினை புரியவிடாது இடையூறு விளைவித்ததன் ஊடாக சந்தேகநபரானவர் இலங்கை தண்டனைச் சட்டக்கோவையினுடைய பிரிவு 344 மற்றும் 486 ஆகிய பிரிவுகளினை மீறியுள்ளதாக குறித்த பீ (B) அறிக்கையில் சார்த்துகை செய்யப்பட்டு இருந்தது.

இதன்படி, குறித்த வழக்கோடு தொடர்புபட்ட சந்தேக நபரினுடைய கையடக்கத் தொலைபேசி இலக்கம் மற்றும் பிரசித்த நொத்தாரிசினுடைய கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பனவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டு அது தொடர்பில் நீதிமன்றினால் ஆக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக குறித்த கையடக்கத் தொலைபேசிகளினுடைய சேவை வழங்குனரின் தொலைத் தொடர்பு அறிக்கைகள் மற்றும் ஏனைய தரவுகள் பெறப்பட்டு சந்தேகநபரானவர் அடையாளங் காணப்பட்ட நிலையில் குறித்த சந்தேகநபரானவர் பிரசித்த நொத்தாரிசுக்கு அழைப்பு ஏற்படுத்தியமையானது தொலைத் தொடர்பு அறிக்கைகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் கடந்த 03.12.2025 யில் கெளரவ மன்றில் மேலதிக அறிக்கைகளினை தாக்கல் செய்த வழக்குத் தொடுநரான நீலாவனைப் பொலிஸார் ஜெயலக்சி டீ சில்வா என்பவரினை குறித்த வழக்கின் சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டிருந்த நிலையில் குறித்த வழக்கின் புலன் விசாரணைகளினை துரிதப்படுத்தி குற்றவியல் நடவடிக்கை முறைக் கோவைச் சட்டத்தினுடைய பிரிவு 120(3) யின் ஏற்பாடுகளுக்கு அமைவாக இறுதி அறிக்கையினை தாக்கல் செய்யுமாறு அல்லது 136 (1) (ஆ) யின் ஏற்பாடுகளின் கீழ் பிராதைத் தாக்கல் செய்யுமாறும் கெளரவ கல்முனை நீதிவான் வழக்குத் தொடுநருக்கு கட்டளையாக்கி இருந்தார்.

இந்நிலையில் கடந்த 07.01.2026 யில் குறித்த வழக்கானது திறந்த மன்றில் அழைக்கப்பட்ட நிலையில் வழக்குத் தொடுநரான நீலவணைப் பொலிஸார் சமர்ப்பனங்களினை மேற்கொண்டு குறித்த வழக்கின் சந்தேகநபரானவர் அம்பாறையில் அமர்கின்ற மாகாண மேல்நீதிமன்றினுடைய கெளரவ மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றி வருவதினால் உதவிப் பொலிஸ் அத்தியகட்சகரினால் தமக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக இது தொடர்பான வழக்கு கோவையானது கெளரவ சட்டமா அதிபரினுடைய ஆலோசனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இது தொடர்பில் ஆலோசனையினைப் பெற்று மேலதிக நடவடிக்கைகளினை மேற்கொள்வதற்கு பிறிதொரு தினம் வழங்குமாறு கெளரவ மன்றைக் கோரி இருந்தனர்.

இந்நிலையில், குறித்த சமர்ப்பணத்திற்கு தமது கடுமையான ஆட்சேபனைகளினை பதிவுசெய்த பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் சார்பிலான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் குறித்த வழக்கிலே இறுதி அறிக்கை அல்லது பிராது தாக்கல் செய்வதற்கு தினம் வழங்கப்பட்டிருந்த நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளும் பிரியத்தனமானது குறித்த வழக்கில் அசாதாரணமான காலதாமதத்தினை ஏற்படுத்தி இவ்வழக்கின் போக்கை மடைமாற்றம் செய்வதற்கான ஒரு எத்தனம் எனவும் வழக்குத் தொடுநரின் இவ்வாறான நகர்வுகள் நீதியைக் கண்டடைவதற்கு தடையாக அமைவதோடு சட்டத்தின் முன் யாவரும் சமம் என்னும் உயரிய சட்டவாட்சிக் கோட்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் எனவும் கடந்த சில மாதங்களாக நிறைவேற்றத் துறையினுடைய உச்சாணிக் கொம்பில் இருந்தவர்கள் கூட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்ட பின்னர் கைது செய்ய
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now