New Updates! Fresh news just arrived.

ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக...

News

ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!

June 22, 2026 9:49 pm
ஆடைத் துறையின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!
டொலர் வருமானத்தினை அதிகரித்து பலமான ஏற்றுமதிப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஆடைத் துறையினுடைய பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய உடனடித் தீர்வுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலானது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்படி, நாட்டின் முன்னணி ஆடைத் துறை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட குறித்த கலந்துரையாடலில், ஆடைத் துறை எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினுடைய புதிய ஏற்றுமதித் திட்டத்தினை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான வசதிகளினை வழங்குவது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான எதிர்காலக் கொள்கைத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

கைத்தொழிற்சாலைகளினை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதன் ஊடாக ஏற்றுமதிப் பொருளாதாரத்தினை வலுப்படுத்த முடியும் என மேலும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக ஒன்றிணையுமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, இதற்காகத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கைத்தொழிற்சாலைக் கட்டடங்களினை அரசாங்கத்தின் அனுசரணையுடன் வழங்குவதற்கான "Plug and Play" முறைமை தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கிய ஜனாதிபதி, ரூபாயில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரித்த போதிலும், இதனால் டொலருக்கு ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு டொலர் ஈட்டும் வழிகளை வலுப்படுத்துவது அத்தியாவசியமானது எனச் சுட்டிக்காட்டினார். ரூபாய் செலவினங்களைக் கட்டுப்படுத்தி, டொலர் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளுகின்ற காணிப் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, காணிகளின் பெறுமதி மற்றும் கொள்கை ரீதியான ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையிடும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான சட்ட மறுசீரமைப்புகளானது தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெட் வரி (VAT) முறைமை காரணமாக உள்நாட்டு மூலப்பொருள் வழங்குநர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டதுடன், அதன்போது வழங்கக்கூடிய மாற்றுச் சலுகைகள் குறித்த முன்மொழிவுகளை விரைவாகச் சமர்ப்பிக்குமாறு வர்த்தகர்களுக்கு அறிவித்தார்.

சந்தை வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்துதல் மற்றும் வெளிநாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தி அந்த நாடுகளிலிருந்து கிடைக்கும் கோட்டா அளவுகளை அதிகரிப்பது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளை மேலும் திறம்பட மேற்கொள்வதற்காக, "வர்த்தகத்திற்கான தேசிய ஒற்றைச் சாளரம்" இந்த ஜூலை மாத இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், முதலீட்டிற்கான தேசிய ஒற்றைச் சாளரத்தை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்படுகின்ற பணம் எமது நாட்டில் இருந்து வெளியில் செல்வதைத் தடுப்பதற்காக, சட்ட மற்றும் தொழில்நுட்ப வழிமுறைகளினை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தினை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு பதிலாக, பொதுமக்களினுடைய உரிமைகளினைப் பாதுகாக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

தமது பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்க வாய்ப்பளித்தமைக்காக முதலீட்டாளர்கள் இதன்போது ஜனாதிபதிக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லும்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு மாதாந்தம் ஒரு சந்திப்பை வழங்குமாறு விடுத்த கோரிக்கையையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டு, அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமாகிய கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுடைய செயலாளரான ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் உபுல்மலி பிரேமதிலக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினுடைய தலைவர் மங்கள விஜேசிங்ஹ, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்கம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும், நாட்டினுடைய முன்னணி ஆடைத் துறை வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now