New Updates! Fresh news just arrived.

அனர்த்தப் பாதுகாப்பு நடவடிக்கை: தேசிய அனர்த்த முகாமைத்துவ...

News

அனர்த்தப் பாதுகாப்பு நடவடிக்கை: தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரின் பங்கேற்புடன் விஷேட கலந்துரையாடல்!

October 15, 2026 11:29 am
அனர்த்தப் பாதுகாப்பு நடவடிக்கை: தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளரின் பங்கேற்புடன்  விஷேட கலந்துரையாடல்!
அடுத்த சில தினங்களில் எதிர்பார்க்கப்படும் பருவ மழையினால் ஏற்படக்கூடிய வெள்ள அபாய அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான விஷேட கலந்துரையாடல் ஒன்று, நேற்று புதன்கிழமை (14) கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.

கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில்
தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலியின் பங்குபற்றுதலுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தப் பருவ மழையினால் வெள்ள அனர்த்தங்கங்கள் ஏற்படலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் மக்களையும் உடமைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான முன்னாயத்த ஏற்பாடுகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

இதற்கமைவாக உலக உணவுத் திட்ட நிறுவனத்தினுடைய நிதி அனுசரணையோடு, தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் முன்னெடுக்கப்படவுள்ள வழிகாட்டல் திட்டங்கள் தொடர்பில் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அவர்களினால் தெளிவுபடுத்தப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை, அட்டாளைச்சேனை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளின் கீழ் 14 கிராம சேவகர் பிரிவுகளில் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.

வருடாந்தம் வழமையாக பெய்யகின்ற 800 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சியானது இம்முறை குறுகிய நாட்களில் மொத்தமாக பொழியுமாயின் கல்லோயா நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீரானது தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அதனைக் கருத்தில் கொண்டே குறித்த முன்னாயத்த நடவடிக்கைகளினை எடுக்க வேண்டியிருப்பதாகவும் இதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் உட்பட தொடர்புடைய அனைத்து நிறுவனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினுடைய பணிப்பாளரான பிரதீப் கொடிப்பிலி இதன்போது வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.

குறித்த கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஏ.எல்.எம். அல்தாப், கல்முனை மாநகர சபையின் கணக்காளர் ஏ.எஸ். அஹ்ஸன் மனாஸிர், வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம், சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல்.ஏ. மஜீட், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஆர்.எம். நளீப் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

(அஸ்லம் எஸ்.மௌலானா)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now