New Updates! Fresh news just arrived.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டு விசாரணை...

News

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டு விசாரணையிலிருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகல்!

April 27, 2026 8:25 pm
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேன்முறையீட்டு விசாரணையிலிருந்து மற்றுமொரு நீதியரசரும் விலகல்!
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகிலுள்ள காடுகளினை அழித்து மீள்குடியேற்றம் செய்தமைக்கு எதிராக வழங்கப்பட்டிருந்த தீர்ப்பை எதிர்த்து, முன்னாள் அமைச்சரான ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவினை விசாரிப்பதிலிருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் இன்று (27) விலகியுள்ளார்.

இதன்படி, ரிஷாட் பதியுதீனால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மேன்முறையீடு, இன்று ஏ.எச்.எம்.டி. நவாஸ், சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகிய மூவராடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த மனு விசாரணையில் இருந்து தான் விலகுவதாக நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, குறித்த மேன்முறையீட்டு மனுவை வேறு ஒரு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் உள்ள காடுகளினை அழித்து அங்கு மக்களினை குடியேற்றியமைக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சுற்றுச்சூழல் நீதி மையம் 2015ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தது.

மேற்படி, குறித்த மனுவை விசாரித்து தீர்ப்பளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த பகுதிகளில் காடுகளினை அழித்தமைக்கு முன்னாள் அமைச்சரே பொறுப்புக்கூற வேண்டும் எனவும், அதற்கமைய மீண்டும் காடுகளினை வளர்ப்பதற்கான செலவை அவர் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, மீண்டும் காடுகளை வளர்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் சுமார் 106 கோடி ரூபாய் பணத்தினை செலுத்த வேண்டும் என்று வனப் பாதுகாப்புத் திணைக்களம் கணக்கிட்டிருந்தது.

குறித்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும், அதனை இரத்து செய்யுமாறு கோரியும் ரிஷாட் பதியுதீன் உயர்நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டினை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விசாரணையில் இருந்து நீதியரசர்களான மஹிந்த சமயவர்தன, யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் ஏற்கனவே விலகியிருந்தமயானது குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now