New Updates! Fresh news just arrived.

தேசிய தைப் பொங்கல் விழா அலரி மாளிகையில்!

News

தேசிய தைப் பொங்கல் விழா அலரி மாளிகையில்!

January 15, 2026 7:00 pm
தேசிய தைப் பொங்கல் விழா அலரி மாளிகையில்!
உழைப்பின் கண்ணியத்திற்கும் இயற்கையிடம் இருந்து கிடைத்த பாதுகாப்பிற்கும் நன்றியினை வெளிப்படுத்தும் ஒரு உன்னத கலாசார பாரம்பரியத்தினை குறிக்கும் வகையில், தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையினுடைய தேசிய கொண்டாட்டம் இன்று (15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினுடைய பங்குபற்றுதலுடன் அலரி மாளிகையில் நடைபெற்றது.

குறித்த தைப்பொங்கல் விழாவினை பிரதமர் அலுவலகம், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களங்கள் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்வில் பிரதமர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோரினுடைய தலைமையில் தைப் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றதோடு, குறித்த விழாவில் இந்து கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தினை வெளிப்படுத்தும் பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் ஜனாதிபதியினுடைய தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியினை முன்வைத்து கருத்துத் தெரிவித்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ,
"இந்த நிகழ்வு தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான கொண்டாட்ட நிகழ்வு. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட பல துறைகளினுடைய பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தைப் பொங்கல் கொண்டாட்டம் நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியினத் தருகின்றது.

குறித்த தைப் பொங்கல் தினத்தில், இலங்கை தேசத்தினை கட்டியெழுப்ப பாடுபடும் அனைத்து இலங்கையர்களுக்கும், உலக மக்களுக்கும் எனது வாழ்த்துக்களினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இவ்வருட தைப் பொங்கல் தினத்தில், ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒவ்வொரு சமூகத்தினுடைய கலாசார மற்றும் மத உரிமைகளினைப் பாதுகாப்பதன் அடிப்படையில் ஒரு இலங்கையினைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியோடு செயற்பட அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

தைப் பொங்கல் கொண்டாட்டத்தினுடைய முக்கிய சாரமாக விளங்குவது, பொறுமை மற்றும் சூழல் மீதான மரியாதை ஆகிய முக்கிய பண்புககளோடு, ஒரு நாடாக முன்னேறுவதன் முக்கியத்துவத்தினையும் அவர் வலியுறுத்தினார்.

நாடு புதியதோர் யுகத்தினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கொள்கை மற்றும் மனப்பான்மை சீர்திருத்தங்கள் மூலம் நாட்டை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இது சவாலானது என்றாலும், அது ஒரு அத்தியாவசிய பணி எனவும் பிரதமர் தெரிவித்தார்.

"தைப் பொங்கல் பண்டிகை, ஒற்றுமையின் முக்கியத்துவத்தினையும், இயற்கையுடனான நமது தொடர்பினையும், நமது அன்றாட வாழ்வில் நன்றியுடன் இருப்பதன் மதிப்பினையும் நமக்கு நினைவூட்டுகின்றது. இன்று இந்த தேசிய தைப்பொங்கல் விழாவினைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன், மேலும் குறித்த நிகழ்வில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து இந்து சமூகத்திற்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களினை தெரிவித்துக்கொள்கின்றேன்" எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த நிகழ்வில் மகாசங்கத்தினர் மற்றும் இந்து சமயத் தலைவர்கள் உட்பட சர்வமத தலைவர்கள், அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் சிறப்பு அதிதிகள், இந்து பக்தர்கள் மற்றும் பாடசாலை பிள்ளைகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now