New Updates! Fresh news just arrived.

அனோஜனின் குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த பத்தர...

News

அனோஜனின் குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன தேரர்: கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு!

September 22, 2026 7:11 pm
அனோஜனின் குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன தேரர்: கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு!
சவூதி அரேபியாவில் தண்டனை எதிர்கொண்டு வருகின்ற நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனினுடைய வீட்டிற்கு ஜனசெத பெரமுனவின் தலைவரும் தேரருமான பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழு இன்று (22) நேரில் விஜயத்தினை மேற்கொண்டு குடும்பத்தினருக்குத் தமது ஆறுதலையும் அனுதாபங்களினையும் தெரிவித்துக் கொண்டனர்.

கல்முனை, நற்பிட்டிமுனையில் அமைந்திருக்கும் அனோஜனின் இல்லத்திற்குச் வருகைதந்த குறித்த குழுவினர், குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்களினை வழங்கி வைத்ததுடன், அனோஜனைத் தண்டனையில் இருந்து மீட்பதற்காகத் தாம் முன்னெடுத்து வரும் முயற்சிகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன் போராட்டம்:

குறித்த சந்திப்பின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன தேரர், அனோஜனினுடைய உயிரைப் பாதுகாத்து அவரை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி நாளை கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பு விசேட கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு, எதிர்வருகின்ற நாட்களில் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்திற்கு நேரில் சென்று அனோஜன் தொடர்பிலான விசேட கோரிக்கை மகஜரொன்றைக் கையளிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள தேரர், அதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை (28) கொழும்புக்கு வருகை தருமாறு அனோஜனுடைய குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்த நிலையில், குறித்த கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட அனோஜனினுடைய குடும்பத்தினரும் அன்றைய தினம் கொழும்புக்கு வருகை தரச் சம்மதமும் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் மன்னிப்புக் கோரிய தாயார்

மேலும், இதன்போது ஊடகங்கள் முன்பு அழுது புலம்பிய அனோஜனினுடைய தாயார், தனது மகனை மீட்டுத் தருமாறு இலங்கை மக்களிடம் உருக்கமாக தனது வேண்டுகோளை விடுத்ததோடு, தனது மகன் செய்த தவறுக்காக மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரி நின்றார்.

குறித்த சந்திப்பில் கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரும் கலந்துகொண்டதோடு, தமிழ் - சிங்கள மொழிபெயர்ப்பு உதவிகளினையும் தொகுத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பாறுக் ஷிஹான்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now