New Updates! Fresh news just arrived.

மணல் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய குளங்களில் இருந்து க...

News

மணல் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய குளங்களில் இருந்து கழுவி எடுக்கப்பட்ட மணலை மக்களுக்கு வழங்கும் படி ஆரம்பம்!

September 23, 2026 5:21 pm
மணல் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய குளங்களில் இருந்து கழுவி எடுக்கப்பட்ட மணலை மக்களுக்கு வழங்கும் படி ஆரம்பம்!
வடக்கு மாகாணத்தில் நிலவும் மணல் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு, குளங்களில் இருந்து கழுவி எடுக்கப்பட்ட மணலை பொதுமக்களின் கட்டுமானத் தேவைகளுக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (23.09.2026) புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 3 கியூப் மணல் சுமை ரூ.44,000 என்ற விலையில் வழங்கப்படுவதுடன், மணலைக் கொண்டு செல்வதற்கான வாகனக் கட்டணம் பயணத் தூரத்துக்கு அமைவாக நிர்ணயிக்கப்படும் என கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு அறிவித்துள்ளார்.

குளங்களில் தேங்கியுள்ள மண்ணைக் கழுவி சுத்திகரித்து, கட்டுமானத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில் அதனை மக்களுக்கு விநியோகிப்பதற்கான பொறிமுறை, கடந்த 17 அன்று வட மாகாண கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மணல் தேவையுள்ளவர்கள் தமது தேவையின் தன்மைக்கு ஏற்ப, பின்வரும் மூன்று வகைகளில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பிரதேச செயலாளரால் உறுதிப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டப் பயனாளர்களுக்குத் தேவையான மணல் அளவு தொடர்பான விவரங்கள், உரிய நடைமுறையின் கீழ் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அரச நிதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் கட்டடப் பணிகளுக்குத் தேவையான மணல் தொடர்பான கோரிக்கைகள், உரிய திணைக்களத்தின் பரிந்துரையுடன், தேவையான மணலின் அளவு குறிப்பிடப்பட்டு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

தனியார் கட்டுமானத் தேவைகளுக்கான விண்ணப்பங்கள் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தலுடன் பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டதன் பின்னர், வழங்கப்பட வேண்டிய மணலின் அளவை மாவட்டச் செயலர் பரிந்துரைத்து, குறித்த தகவல் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து, மாவட்டச் செயலரின் பரிந்துரையின் அடிப்படையில் உள்ளூராட்சி மன்றம் உரிய மணல் கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளும். மணல் விநியோகம் கிளிநொச்சி மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் வகையில் பொறிமுறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மணல் சுமை உரிய பயனாளியின் குறிப்பிட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்படும்.

3 கியூப் மணலின் அடிப்படை விலை ரூ.44,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக மணலைக் கொண்டு செல்லும் தூரத்துக்கு ஏற்ப வாகனக் கட்டணம் அறவிடப்படும்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான வாகனக் கட்டணப் பொறிமுறையில், முதல் 3 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கு ரூ.10,000 அறவிடப்படுவதுடன், அதனைத் தொடர்ந்து 10 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.300 வீதமும், 10 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.225 வீதமும் அறவிடப்படும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான போக்குவரத்துக் கட்டணப் பொறிமுறையில், ஆரம்ப 3 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கான கட்டணம் கிலோமீற்றருக்கு ரூ.1,250 எனவும், தொடர்ந்து 10 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.300 எனவும், 10 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.225 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மணல் விநியோகத்தில் ஒழுங்கையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் வகையில், விண்ணப்பம் முதல் மணல் அளவு நிர்ணயம், உள்ளூராட்சி மன்றத்தில் பணம் செலுத்துதல் மற்றும் பாரவூர்தி கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக மணல் விநியோகம் செய்தல் வரையிலான அனைத்து கட்டங்களும் முறையான நடைமுறையின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர் மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now