New Updates! Fresh news just arrived.

ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு பிணை!

News

ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு பிணை!

July 28, 2026 12:51 pm
ரகித ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கு பிணை!
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதியின் முன்னாள் அமைப்பாளராக செயற்பட்ட சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களுள் ஒருவரான அருண ஹென்னதிகே ஆகிய மூவரினையும் பிணையில் செல்வதற்கு அனுமதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றமானது இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

கடந்த வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர்களின் சட்டத்தரணிகளால் இந்த பிணைக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இன்றைய தினம் பிணை உத்தரவை அறிவித்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரம, சந்தேகநபர்கள் ஒவ்வொருவரினையும் தலா ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்வதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.

சரீரப் பிணையாளர்கள் பிணையின் பெறுமதியை உறுதிப்படுத்தும் வகையிலான வருமானம் அல்லது சொத்துக்கள் உள்ளமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவானின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், அவர்களின் கடவுச்சீட்டுக்களை (Passport) நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் இதன்போது உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, விசாரணைகளின் முன்னேற்றத்தை டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் இலஞ்ச ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டார்.

ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க ஆகிய இருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய புலனாய்வு ஆணைக்குழுவினுடைய அதிகாரிகளினால் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'ஹரக் கட்டா' என்பவரிடமிருந்து இலஞ்சம் பெற்றமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந்தக்க விக்கிரமரத்ன என்பவரை பொலிஸார் கொலை செய்வதைத் தடுப்பதற்காகவும், அவரது தடுப்புக்காவல் உத்தரவை நீக்கி காலி பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையைத் தவிர வேறொரு சிறைச்சாலைக்கு அவரை மாற்றுவதற்காகவும், விசாரணை நடவடிக்கைகளில் இருந்து அவரை விடுவிப்பதற்காகவும் இந்த இலஞ்சம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த செயற்பாடுகளுக்காக 2023 ஆம் ஆண்டில் டுபாயில் வைத்து, ஹரக் கட்டாவின் மனைவியான மதுஷிகா மதுவந்தியிடம் 50 கோடி ரூபாவை இலஞ்சமாகக் கோரி, பின்னர் தொகையைக் 20 கோடி ரூபாயாக குறைத்து அதில் 12 கோடி ரூபாவை முன்பணமாகக் கோரிப் பெற்றுக் கொண்டதாக ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, இவர்கள் இருவரும் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளராகச் செயற்பட்ட வருஷ ஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க என்பவரும் இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now