New Updates! Fresh news just arrived.

சிறுவர் பராமரிப்பு உலகளாவிய சாசனத்திற்கு அங்கீகாரம் வழங்...

News

சிறுவர் பராமரிப்பு உலகளாவிய சாசனத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ள அமைச்சரவை: யுனிசெஃப் வரவேற்பு!

May 8, 2026 2:16 am
சிறுவர் பராமரிப்பு உலகளாவிய சாசனத்திற்கு  அங்கீகாரம் வழங்கியுள்ள அமைச்சரவை: யுனிசெஃப் வரவேற்பு!
சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தங்கள் குறித்தான உலகளாவிய சாசனத்திற்கு (Global Charter for Child Care Reforms) அமைச்சரவை வழங்கியுள்ள அங்கீகாரத்தினை யுனிசெப் வரவேற்றுள்ளது.

இது சிறுவர் பாதுகாப்பினை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள 'மாற்றுப் பராமரிப்புக் கொள்கை'யை (Alternative Care Policy) மேலும் உத்வேகத்தோடு, முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் எடுக்கப்பட்ட ஒரு மைல்கல் தீர்மானமாகும்.

கடந்த பல வருடங்களாக, பராமரிப்புச் சீர்திருத்தங்களினை மேம்படுத்துவதற்காக யுனிசெப் நிறுவனம் இலங்கை அரசாங்கத்தோடு, கைகோர்த்துச் செயற்பட்டு வருகின்றது.

தேசிய மாற்றுப் பராமரிப்புக் கொள்கையினை உருவாக்குதல், வதிவிட பராமரிப்பு நிறுவனங்கள் தொடர்பான தேசியக் கணக்கெடுப்பினை நடத்துதல் மற்றும் மாகாண ரீதியிலான செயல் திட்டங்களுக்கு ஆதரவளித்தல் ஆகியன இதில் அடங்கும்.

இத்தகைய முயற்சிகளினுடைய விளைவாக, 2018ஆம் ஆண்டில் இருந்து நிறுவன ரீதியான பராமரிப்பிலுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தால் குறைந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மாத்திரம் 6,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இதுபோன்ற நிறுவனங்களில் சேர்க்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 2,000 சிறுவர்கள் மீண்டும் அவர்களினது குடும்பங்களுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைத்துவம், சான்றுகள் மற்றும் கூட்டாண்மை ஆகியவை ஒன்றிணையும் போது எத்தகைய சாதனைகளினையும் நிகழ்த்த முடியும் என்பதற்கு குறித்த வெற்றிகள் சான்றாகும். இருப்பினும், இலங்கையின் வதிவிட பராமரிப்பு நிலையங்களில் 8,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வளர்ந்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோருக்குக் குறைந்தபட்சம் ஒரு பெற்றோரேனும் உயிருடனுள்ளனர். வறுமை, வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் மற்றும் சமூகக் களங்கம் அல்லது சமூக அடிப்படையிலான சேவைகளிலுள்ள இடைவெளிகள் போன்ற காரணங்களே இச்சிறுவர்கள் குடும்பங்களினை விட்டுப் பிரிவதற்குக் காரணமாக அமைகின்றன.

குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, உலகளாவிய சாசனம் ஒரு பெறுமதியான வழிகாட்டுதலை வழங்குகின்றது. அவசியமற்ற முறையில் குடும்பங்களில் இருந்து சிறுவர்கள் பிரிக்கப்படுவதைத் தடுத்தல், குடும்பம் சார்ந்த பராமரிப்புக்கு முன்னுரிமையளித்தல் மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட பராமரிப்பு முறையில் இருந்து படிப்படியாக விலகுதல் ஆகியவை இதன் கொள்கைகள், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மாற்றுப் பராமரிப்புச் சீர்திருத்தங்களுடன் ஒத்துப்போகின்றன.

கொள்கைகள் அவசியமானவை என்றபோதிலும், நிதி ஒதுக்கீடு மற்றும் முறையான அமுலாக்கமே உண்மையான மாற்றத்தினை ஏற்படுத்தும்.

வழக்கு முகாமைத்துவக் கட்டமைப்புகளினை (Case Management Systems) வலுப்படுத்துதல், குடும்ப ஆதரவு சேவைகளினை விரிவுபடுத்துதல் மற்றும் ஒவ்வொரு சிறுவனும் பாதுகாப்பான மற்றும் ஆதரவான குடும்பச் சூழலில் வளர்வதினை உறுதி செய்தல் ஆகியவையே இன்றைய தேவையாகும். குறித்த அர்ப்பணிப்பைச் சிறுவர்களுக்கான நிலையான மாற்றமாக மாற்றுவதற்கு அரசாங்கம், மாகாண அதிகாரிகள் மற்றும் சிவில் சமூகப் பங்காளிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க யுனிசெப் தயாராகவுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now