New Updates! Fresh news just arrived.

வைத்தியர் சுகுணனால் ஆறு பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு...

News

வைத்தியர் சுகுணனால் ஆறு பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

September 28, 2026 6:48 pm
வைத்தியர் சுகுணனால் ஆறு பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு: நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!
கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறப்படும் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கும், வழக்கு முடிவடையும் வரை வைத்தியர் சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிடுவதற்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், குறித்த ஆறு பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் அண்ணாதுரை தர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கான நியமனங்கள் மற்றும் அவர்களின் ஆடை தொடர்பில் கடந்த மாதம் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கு. சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான மற்றும் தடைசெய்யப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் பதிவிடப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வைத்தியர் கு. சுகுணன், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மௌலவி முஹமத் மிப்லால், சிரேஷ்ட ஊடகவியலாளர் உமர் லெப்பை மப்ரூப், ஓய்வு பெற்ற கல்வியியலாளர் அஹமட் லெப்பை முகமது முத்தார் மற்றும் சமூக செயற்பாட்டாளர் முகமது இப்ராஹிம் உள்ளிட்டோருக்கு எதிராகவும், யூடியூப் மற்றும் பேஸ்புக் தளங்களுக்கு எதிராகவும் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த 22ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் அண்ணாதுரை தர்ஷினி முன்னிலையில் திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்காளி சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ் மற்றும் சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா ஆகியோர் ஆஜராகி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர். இதன்போது, வழக்கில் நிபந்தனைக்குட்பட்ட இடைக்காலக் கட்டளையைப் பிறப்பிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக வழக்கு இன்று 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, இன்று (28) வழக்கு மீண்டும் திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வைத்தியர் கு. சுகுணன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பாக வழக்கு முடிவடையும் வரை பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுவதற்கு குறித்த ஆறு பேருக்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

அத்துடன், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறு பேரையும் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மாளிகைக்காடு செய்தியாளர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now