New Updates! Fresh news just arrived.

சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடுவோர் மிகவும் பொறுப்...

News

சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடுவோர் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்!

September 27, 2026 1:04 pm
சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடுவோர் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்!
கல்விக்கு ஏழ்மை ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது என்றும், இன்றைய நவீன உலகில் கல்வியுடன் தொழில்நுட்ப அறிவும், மொழியறிவும் இளைஞர்களுக்கு அத்தியாவசியமானதாகும் என்றும் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தெரிவித்தார்.

ஈ-பெஸ்ட் கெம்பஸின் கல்முனைக் கிளையில் பாடநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (26) காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்து உரையாற்றினார்.

இதன்போது தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், “கல்விக்கு ஏழ்மை தடையல்ல. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பக் கல்வியும் மொழியறிவும் ஒவ்வொரு மாணவரினதும் எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானவை” எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வேகமாக முன்னேறி வருகின்றது. உலகின் பல நாடுகள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலவு உள்ளிட்ட விண்வெளி தொடர்பான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நாமும் காலத்திற்கேற்ற அறிவையும் திறன்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் மனித சமூகத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்ற போதிலும், அவற்றை தவறாகப் பயன்படுத்தும்போது தீமைகளும் ஏற்படக்கூடும். எனவே, மாணவர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

“நல்லவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு, தீயவற்றை ஒதுக்கும் அன்னப்பறவை போன்ற அறிவாற்றலை இக்கால மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

சமூக ஊடகங்களின் பயன்பாடு தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த அவர், ஊடகங்களில், குறிப்பாக சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடுவோர் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ஒரு பொறுப்பற்ற கருத்து அல்லது பதிவு ஒருவருக்கு பாரிய சட்ட மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுவதாகவும், எனவே எந்தவொரு கருத்தையும் வெளியிடுவதற்கு முன்னர் அதன் விளைவுகளைச் சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் போட்டியிடக்கூடிய வகையில் எமது மாணவர்களின் அறிவையும் திறமைகளையும் மேம்படுத்த வேண்டியது பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போதைய சூழலில் பிள்ளைகளின் செயற்பாடுகளை பெற்றோர் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை முழுமையாகத் தவிர்ப்பது தீர்வாகாது; மாறாக, அதனை எவ்வாறு பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துவது என்பது தொடர்பில் பிள்ளைகளுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்ப அறிவுடன் ஆங்கிலம் உள்ளிட்ட மொழித்திறன்களையும் வளர்த்துக்கொள்ளும் மாணவர்கள் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் உருவாகும் வேலைவாய்ப்புகளையும் கல்வி வாய்ப்புகளையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் சுட்டிக்காட்டினார்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now