New Updates! Fresh news just arrived.

இனவாதம், மதவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்ற சதி: தம...

News

இனவாதம், மதவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்ற சதி: தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!

October 3, 2026 12:58 pm
இனவாதம், மதவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்ற சதி: தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்!
இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பலதரப்பட்ட சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இன்று இந்த நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி இனங்களுக்கு இடையே பாரிய மோதல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதை நாங்கள் அறியக்கூடியதாக உள்ளது. இந்த நாட்டில் உள்ள சில நபர்களுக்குச் சர்வதேசத்திலிருந்து கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என மக்கள் கருதுகின்றனர்.

இதன் அடிப்படையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தைச் சேர்ந்த மக்களும் இதில் மிக விழிப்பாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் பயணிக்க வேண்டிய காலகட்டம் இதுவாகும். இனம், மதம் அல்லது வேறு விடயங்களைச் சார்ந்து குழப்பங்களை ஏற்படுத்த முனையும் சக்திகளுக்கு முகநூல் (Facebook) அல்லது யூடியூப் (YouTube) போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாகத் தூண்டலை ஏற்படுத்தி நாம் பலிகடாவாகிவிடக் கூடாது.

நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நாம் அனைவரும் ஒருமித்துச் செயல்பட வேண்டும். கடந்த காலங்களிலும் நாட்டில் பாரிய அசம்பாவிதங்களையும் இன முரண்பாடுகளையும் தோற்றுவிக்கப் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தன. இருப்பினும், அரசாங்கம் சில விடயங்களை மிக நுணுக்கமாகவும் அவதானமாகவும் கையாண்டதன் நிமித்தமே அந்தப் ஆபத்துக்கள் தவிர்க்கப்பட்டுச் சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அரசியல்வாதிகளாக இருக்கலாம், யூடியூபர்களாக இருக்கலாம், முகநூல் வாயிலாகக் கருத்துப் பரப்புபவர்களாக இருக்கலாம் அல்லது வெளிநாடுகளிலிருந்து இயங்குபவர்களாக இருக்கலாம் — இவர்கள் அனைவரும் எங்களைச் சுயநல அரசியல் தேவைகளுக்காகப் பலிகடாவாக்கப் பார்க்கிறார்கள். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே விரிசலை ஏற்படுத்தி, அதில் குளிர்காய நினைக்கிறார்கள்" எனச் சுட்டிக்காட்டினார்.

"இது போன்ற சதி முயற்சிகளுக்கு நாம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டுமாகயிருந்தால் நாட்டின் அனைத்து இன மக்களும் எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றாகக் கை கோர்க்க வேண்டும். மக்களைத் தூண்டிவிட்டுத் தங்களின் சுயநல அரசியலை அறுவடை செய்யத் துடிக்கும் சக்திகளுக்குத் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் அனைவரும் இணைந்துச் சரியான பதிலடியைக் கொடுக்க வேண்டும்" என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இங்கு மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

(பாறுக் ஷிஹான்)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now