New Updates! Fresh news just arrived.

சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி...

News

சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில்!

February 3, 2026 4:21 pm
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை பிரதேச ஆண்டியர் சுற்றுச் சந்தி வழக்கு மீண்டும் ஏப்ரலில்!
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டமுரணான சுற்றுச் சந்தி (Roundabout) கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல். மாஹிரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (03) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி, வர்த்தமானியின் மூலம் "அபிவிருத்திப் பிரதேசமாக" பிரகடனம் செய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும், குறித்த பிரதேசத்திற்குரிய உள்ளூராட்சி அதிகார சபையின் அனுமதியுடன் மட்டுமே நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.

இந்நிலையில், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்அனுமதியின்றி பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகளுடன் ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் மேற்கொள்ளப்பட்டுவரும் சுற்றுச் சந்தி உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் சட்டமுரணானவை எனக் குறிப்பிட்டு, அவற்றை உடனடியாக நிறுத்துமாறு கோரி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர் மற்றும் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி வழக்கை முன்கொண்டு செல்வது தொடர்பில் தமது பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைத்தார். அவற்றை நிராகரித்த நீதிவான், வழக்கை காரணங்காட்டல் விசாரணைகளுக்காக திகதியிட்டார்.

மேலும், கடந்த 20.01.2026 அன்று ஆண்டியர் சந்தியை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான விடயங்களை சுட்டிக்காட்டிய நீதிவான், குறித்த சந்தியில் சிதிலமடைந்துள்ள வீதியைச் செப்பனிடுவது குறித்து மனுதாரரின் நிலைப்பாட்டை கேட்டறிந்தார்.

இதற்கு பதிலளித்த மனுதாரர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், ஆண்டியர் சந்தியில் சிதிலமடைந்துள்ள வீதியை புனரமைக்குமாறு பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைத்து வருவதாகவும், பொதுமக்கள் நலன் கருதி பாதிக்கப்பட்ட வீதியை மட்டுமே செப்பனிடுவதற்கு மனுதாரருக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை எனவும் மன்றுக்கு அறிவித்தார். அதேவேளை, சட்டமுரணாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச் சந்தி மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் தற்போதுள்ள நிலைமையை (Status Quo) தொடர்ச்சியாக பேணுமாறு கட்டளையிடுமாறு கோரினார்.

இந்த விண்ணப்பத்தினை பரிசீலித்த நீதிவான், இன்றிலிருந்து இரு வாரங்களுக்குள் ஆண்டியர் சந்தியில் குன்றும் குளியுமாக சேதமடைந்துள்ள பாதையை மட்டுமே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக செப்பனிடுமாறும், சுற்றுச் சந்தி மற்றும் நடைபாதை தொடர்பில் எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளக் கூடாது எனவும், முன்னர் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளுக்கு அமைவாக நிலவும் நிலைமை (Status Quo) அப்படியே பேணப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் 21.04.2026 அன்று பிரதிவாதிகள் சார்பான காரணங்காட்டல் விசாரணைகளுக்காக மீண்டும் அழைக்கப்படவுள்ளது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now