New Updates! Fresh news just arrived.

பருத்தித்துறை நகரசபை விவகாரம்: ஆளுநரின் விசாரணைக்கு நீதிம...

News

பருத்தித்துறை நகரசபை விவகாரம்: ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு!

April 27, 2026 7:23 pm
பருத்தித்துறை நகரசபை விவகாரம்: ஆளுநரின் விசாரணைக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிப்பு!
வடக்கு மாகாண ஆளுநரால் பருத்தித்துறை நகரசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண மேல் நீதிமன்றம் இன்று (27) இடைக்காலத் தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது.

பருத்தித்துறை நகரசபைத் தவிசாளரான டக்ளஸ் டி போல் மற்றும் நகரசபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலம் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னரே நீதிமன்றம் குறித்த அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது.

பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட மரக்கறிச் சந்தையினைப் பழைய இடத்திற்கு மாற்றுவதற்குச் சபை மேற்கொண்ட தீர்மானம் உள்ளிட்ட விடயங்களினை அடிப்படையாகக் கொண்டு, தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக விசாரணைகளினை நடத்த முன்னாள் மாவட்ட நீதிபதி க. அரியநாயகம் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று கடந்த 2026 மார்ச் 12 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக நியமிக்கப்பட்டிருந்தது. குறித்த விசாரணைக் குழுவின் முன்னிலையில் 2026 ஏப்ரல் 21 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஆளுநரினுடைய குறித்த நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர்கள் மேல் நீதிமன்றத்தினை நாடியிருந்தனர்.

மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் நீதிமன்றத்தில் முக்கிய வாதங்களினை முன்வைத்தார். நகரசபையினுடைய சனநாயக ரீதியான தீர்மானங்கள் குறித்து விசாரணை நடத்த முடியாது என, இது நகரசபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என அவர் வாதிட்டார்.

மேலும், 2026 ஏப்ரல் 08 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி என்பவர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகபூர்வமாக வெளியாவதற்கு முன்னரே அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கருத்துத் தெரிவித்திருந்தமையினை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, குறித்த விசாரணை நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், தவிசாளரைப் பதவியில் இருந்து நீக்கும் முயற்சியாகும் என்றும் வாதிட்டார்.

குறிப்பாக, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆளுகைக்கு உட்பட்ட பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி நகரசபைகளினை இலக்கு வைத்து இவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டத்தரணியின் வாதங்களினை ஏற்றுக்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் ராஜா, மனுதாரர்களினுடைய வாதங்களில் முகாந்திரம் இருப்பதாகக் கருதி, குறித்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிரான விசாரணைகளினை முன்னெடுக்கக் கூடாதென இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணிகளான பெனார்சி பிரதீபன் மற்றும் சி. அபினாஸ் ஆகியோரினுடைய அனுசரணையுடன் கலாநிதி கு. குருபரன் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now