New Updates! Fresh news just arrived.

சற்று முன்னர் பிள்ளையானுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த...

News

சற்று முன்னர் பிள்ளையானுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

June 30, 2026 11:12 am
சற்று முன்னர் பிள்ளையானுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் T-56 ரக துப்பாக்கிகளால் மேற்கொள்ளப்பட்டு ஐந்து நபர்கள் கொல்லப்பட்ட சம்பவத் தொடருடன் தொடர்புடைய வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினம் (30) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்காக பிள்ளையான் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நீதிமன்ற வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற இந்த மனிதக் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக நீண்டகால விசாரணைகளின் பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) கடந்த 15ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

அந்த அறிக்கையின்படி, இந்த சம்பவத் தொடருடன் தொடர்புடையதாக மூன்று சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதில் முதலாவது சந்தேகநபர் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய இரு சந்தேகநபர்கள் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டு, 2025 ஆகஸ்ட் 13 மற்றும் நவம்பர் 13ஆம் திகதிகளிலிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவங்களில், 2008 ஜனவரி 09ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடி பகுதியில் முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2008 மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், மற்றும் 2008 ஆகஸ்ட் 20ஆம் திகதி வவுணதீவு பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவை இதில் அடங்குகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now