New Updates! Fresh news just arrived.

விஹாரமஹா தேவியில் போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப...

News

விஹாரமஹா தேவியில் போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

October 23, 2026 9:53 am
விஹாரமஹா தேவியில் போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுவிக்குமாறு
வலியுறுத்தி வரும் சத்தியாகிரக போராட்டத்திற்கு எதிராக,
கொழும்பு நீதிமன்றம் கட்டளையொன்றைப் பிறப்பித்துள்ளது.

கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கருத்திற் கொண்டு இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இப் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வரும் உலப்பனே சுமங்கல தேரர், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பிக்குகள், அத்துடன் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் அத்தோடு பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இந்த நீதிமன்ற உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் மூலம் விஹாரமஹா தேவி பூங்காவின் புத்தர் சிலைக்கு அருகில் உள்ள வளாகம், நடைபாதைகள் அத்துடன் எஃப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை, லிப்டன் சுற்றுவட்டம், சொய்சா சுற்றுவட்டம், தர்மபால மாவத்தை, கன்னங்கர மாவத்தை, கிரீன் பாத் மற்றும் ப்ளவர் வீதி உள்ளிட்ட பல வீதிகளை மறித்து போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ப்ளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்னாலும், விஹாரமஹா தேவி பூங்காவின் புத்தர் சிலையைச் சுற்றியுள்ள பகுதியிலும் தொடர்ந்தும் தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறும், அத்தோடு மிக முக்கியமாக பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 106(1) பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் 106(3) பிரிவின் பிரகாரம் குறித்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்படுவது இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 185 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் நீதிமன்றம் உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now