New Updates! Fresh news just arrived.

வங்கக்கடலில் உருவானது 'முரசு' சூறாவளி: கடற்பகுத...

News

வங்கக்கடலில் உருவானது 'முரசு' சூறாவளி: கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

November 1, 2026 7:12 pm
வங்கக்கடலில் உருவானது 'முரசு' சூறாவளி: கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் விருத்தியடைந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சூறாவளியாக வலுவடைந்துள்ளதுடன், அதற்கு 'முரசு' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்துக்கு அப்பாலுள்ள ஆழ்கடல் பகுதிகளுக்குப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்த அவசர எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியானது இன்று (1) முற்பகல் 11.30 அளவில் வடக்கு அகலாங்கு 12.1° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.3° ஆகிய எல்லைகளுக்கு அருகில் மையங்கொண்டிருந்தது.

'முரசு' சூறாவளியானது மேற்கு நோக்கிச் சாய்வாக வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (2) காலையாகும்போது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய-மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர சூறாவளியாக மேலும் வலுவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், நாளை நள்ளிரவுக்கும் நாளை மறுநாள் (3) அதிகாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை கடந்து நிலப்பரப்பிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

வரைபடத்தில் 'எச்சரிக்கை' (Warning) பிரிவின்கீழ் குறிக்கப்பட்டுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்யக்கூடும். இதனால் அப்பகுதிகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

எனவே, மறு அறிவித்தல் வரும் வடக்கு அகலாங்கு 10° முதல் 15° வரையிலான மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80° முதல் 90° வரையிலான கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்ட கடற்பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழ்கடல் பகுதிகளிலும் மறு அறிவித்தல் வரும் வரை கடற்றொழில் மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று (1) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அவசர எச்சரிக்கை அறிவித்தல், அடுத்த 24 மணிநேரத்துக்குச் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now