New Updates! Fresh news just arrived.

தடுப்புக்காவலில் உயிரிழப்பு: விசாரணைகளை முன்னெடுத்துள்ள ப...

News

தடுப்புக்காவலில் உயிரிழப்பு: விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்!

June 8, 2026 1:00 pm
தடுப்புக்காவலில் உயிரிழப்பு: விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார்!
குடும்ப பிரச்சினை தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரினுடைய மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகளானது ஆரம்பமாகியுள்ளது.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்திலுள்ள சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்படுகின்ற சிறைக் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

119 இலக்க முறைப்பாட்டிற்கமைய குடும்பப் பிரச்சினை குறித்து கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு குடும்பஸ்தர் சிறைக்கூடத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி, குடும்பஸ்தர் அணிந்திருந்த சாரன் துண்டினை பயன்படுத்தி தூக்கிலிட்டு உயிரிழந்திருப்பதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, 65 வயது மதிக்கத்தக்க 6 பிள்ளைகளினுடைய தந்தையான உயிரிழந்த குடும்பஸ்தரினுடைய உறவினர்கள் சிலர் பொலிஸ் நிலையத்திற்கு வந்து தூக்கில் அவர் தொங்கி உயிரிழக்க வில்லை என்றும் உயிரிழந்தவரினுடைய உடம்பில் காயங்கள் காணப்படுவதாகவும், ஆகவே நீதி வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

மேலும், இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இதுபோன்ற குடும்ப பிரச்சினைக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அதே பிரச்சினைக்காகவே அவர் மீண்டும் இரண்டாவது சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, உயிரிழந்தவரினுடைய சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் மரண விசாரணையின் பின்பு பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்படும் என்றும் பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர் காரைதீவு 1 பிரிவு மாதவி வீதியினை சேர்ந்த சாமித்தம்பி பாக்கியராசா ஆவார்.இவர் முன்னாள் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன திணைக்களத்தின் உத்தியோகத்தர் என் எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற பொலிஸ் நிலையத்திற்கு அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.என்.பி டந்தநாராயண காரைதீவு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆர்.ஐ.பி ஜெயரட்ண காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரினுடைய மரணம் குறித்து தற்போது பல்வேறு மட்டங்களில் மேலதிக விசாரணைகளானது ஆரம்பமாகியுள்ளன.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now