New Updates! Fresh news just arrived.

எரிசக்தி நுகர்வைக் குறைக்குமாறு பிரதி அமைச்சர் சதுரங்க அப...

News

எரிசக்தி நுகர்வைக் குறைக்குமாறு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கோரிக்கை!

March 16, 2026 5:13 pm
எரிசக்தி நுகர்வைக் குறைக்குமாறு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கோரிக்கை!
தற்போது நிலவுகின்ற நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், QR முறைமையானது அவசியப்படாது என இன்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சரான சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தச் சிக்கல் இலங்கைக்கு மாத்திரம் அல்லாமல் உலகம் முழுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு பிரச்சினை என்றும் அவர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

ஆகவே, முடிந்தவரைக்கும் எரிசக்தி நுகர்வைக் குறைக்குமாறு பிரதி அமைச்சர் மக்களிடம் கோரிக்கையினை விடுத்துள்ளார்.

"இவ்வேலையில், எமது நாட்டிற்கு மாத்திரம் இல்லாமல், முழு உலகிற்குமே இது ஒரு கடினமான சூழ்நிலை. இதற்கு முன்னர் இந்நாடு வங்குரோத்தானதால் எமக்கு எரிசக்தி கிடைக்காமல் போன ஒரு நிலமையிருந்தது. இப்போது நாம் எவ்வளவு வலுவாக இருந்தாலும், உலகத்திடமிருந்து எண்ணெயைப் பெற்றுக்கொள்வதில் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே நாம் சிக்கனமாகச் செயல்பட வேண்டும்.

அதனால்தான் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானது. சிக்கனமான ஒரு சமூகமாக நாம் எவ்வாறு கட்டியெழுப்பப்பட வேண்டும்? குறித்த நெருக்கடியினையும் எதிர்காலத்தினையும் எதிர்கொள்ள எமக்குச் சாதகமான சூழலுள்ளது. முடிந்தால் மின்சார நுகர்வைக் குறைத்துக் கொள்ளுங்கள், பயணங்களைக் குறைத்துக்கொண்டு முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள்.

எம்மாலும் ஒரு பங்களிப்பை வழங்க முடியும். கடந்த மாதம் நாம் 40 லீட்டர் எரிபொருளைப் பயன்படுத்தியிருந்தால், இந்த மாதம் அதனை 30 லீட்டராகக் குறைத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? அரசாங்கம் QR முறைமையைக் கொண்டுவரத் தேவையில்லை.

QR என்பது ஒரு தொழில்நுட்பம் என்பதினை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் தாங்களாகவே நுகர்வைக் குறைத்துக் கொண்டால் QR அவசியப்படாது. தொழில்நுட்பம் முக்கியமல்ல. QR ஊடாகவும் வழங்கலாம், பங்கீட்டு முறை (Ration) மூலமும் வழங்கலாம் இல்லாமல் போனால் கூப்பன் முறையினுடாகவும் வழங்கலாம். தொழில்நுட்ப ரீதியாக மிகவும் பொருத்தமானது QR முறைமையாகும்.

இப்போது எம்மிடம் உள்ள எரிபொருள் அளவை அத்தியாவசியத் தேவைகளுக்குப் பயன்படுத்தி, தேவையற்ற விடயங்களுக்குக் குறைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அது மக்களின் கையில்தான் உள்ளது.

எந்த வேலைத்திட்டத்தைக் கொண்டு வந்தாலும் மக்கள் மாறாமல் எமது நாட்டின் எரிபொருள் நுகர்வைக் குறைக்க முடியாது. கடந்த மாத எரிபொருள் நுகர்வில் நாம் 20 சதவீதத்தினை ஒரு சமூகமாக நாம் சேமிக்க வேண்டும். அதுவே இலக்காகும். அது அரசாங்கம் கொண்டு வரும் தொழில்நுட்பமோ அல்லது கொள்கையோ அல்ல. ஒரு சமூகமாக நாம் அதனைப் பொறுப்பேற்க வேண்டும்.

நாம் கட்டியெழுப்பிய மக்கள் அரசாங்கம், நாம் கட்டியெழுப்பிய பொருளாதாரம், வரவிருக்கும் பொருளாதாரத்திற்கு இந்த நேரத்தில் எம்மால் வழங்கக்கூடிய பங்களிப்பு என்ன? தற்காலிகமாக எரிசக்தி நுகர்வைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது தெரியாது.

உலகில் அவ்வப்போது இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படுகின்றன. எமது நாட்டின் காரணத்தினால் இது ஏற்படவில்லை, இது வெளியில் இருந்து வந்த ஒரு சவால். ஆனால் ஒரு சமூகமாக நாம் இதனை எதிர்கொண்டால், இரண்டு மூன்று மாதங்களுக்குள் நாம் இருந்த நிலைக்குத் திரும்ப முடியும்.

அந்தத் தியாகத்தைச் செய்ய நாம் தயாராக இல்லையென்றால், நெருக்கடி எம்மை முந்திக்கொள்ளும். அத்தகைய நிலையை எதிர்கொள்ள வேண்டிய தேவை எமக்கு இல்லை. அத்தியாவசியத் தேவைகள் உள்ளன. ஆரோக்கியம், பாதுகாப்புப் பிரிவினர், பொதுப் போக்குவரத்து, உற்பத்தித் தொழில்கள் போன்றவை தடையின்றி இயங்க வேண்டும். நாம் பிரஜைகளாக எமது அன்றாட நுகர்வைக் குறைத்துக்கொள்ள வேண்டும்." என்றார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now