New Updates! Fresh news just arrived.

வலப்பனையில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களை ...

News

வலப்பனையில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களை சந்தித்த பிரதி அமைச்சர்

July 12, 2026 2:08 pm
வலப்பனையில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களை சந்தித்த பிரதி அமைச்சர்
வலப்பனை பிரதேசத்திற்குட்பட்ட ஹால்ஹர்னோயா சென்லெனால்ட்ஸ் தோட்டத்தில் தாம் வசித்து வந்த வீடுகளில் இருந்து வௌியேற்றப்பட்ட குடும்பங்களை பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேசத்திற்குட்பட்ட ஹல்கரனோயா சென்லெனால்ட்ஸ் தோட்டத்தில் வசித்து வந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர், நீதிமன்றத் தீர்ப்பொன்றைத் தொடர்ந்து தாங்கள் வாழ்ந்து வந்த வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வலப்பனை நீதவான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய, பிஸ்கல் அதிகாரிகளினால் இந்த வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிரந்தரமான மாற்று இடவசதி இன்றி பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பங்கள், தற்போது அதே தோட்டப் பகுதியில் அமைந்துள்ள பாலர் பாடசாலை ஒன்றில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்கலாக 40 பேர் ஒரே இடத்தில் தங்கியுள்ளதால், அவர்களின் அன்றாட வாழ்க்கை பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்நிலையில், இன்று (12) பாதிக்கப்பட்ட மக்களை பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஸணன் கலைச்செல்வி ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

பாலர் பாடசாலையில் தங்கியுள்ள குடும்பங்களைச் சந்தித்த பிரதி அமைச்சர், அவர்களின் தற்போதைய நிலை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இதன்போது, நீண்டகாலமாக வாழ்ந்து வந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால், பிள்ளைகளுடன் செல்வதற்கு வேறு வழியின்றி நிர்க்கதியாகியுள்ளதாகத் தெரிவித்த பெண்கள், கண்ணீர் மல்க தங்களது துயரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தமக்கான பாதுகாப்பான நிரந்தர இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தருமாறு அவர்கள் உருக்கமான கோரிக்கையை விடுத்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், அவர்களின் எதிர்காலம் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மாற்று இருப்பிட வசதிகள் மற்றும் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

தங்களுக்கு விரைவில் பாதுகாப்பான மாற்று இருப்பிடம் வழங்கப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now